அமெரிக்க முத்தமிழ் ஹைக்கூ பேரவை தோற்றமும் - வளர்ச்சியும்

 


அமெரிக்க முத்தமிழ் ஹைக்கூ பேரவை தோற்றமும் - வளர்ச்சியும்

       மண்ணில் தோன்றி  துளிர்ப்பதும் மடிவதுமாய் வாழும் மனிதர்கள் கோடி, அதில் மகத்துவம் கண்டு  சரித்திரம் படைக்கும் சாதனை மனிதர்கள் மிகச்சிலரே. நம் அமெரிக்க முத்தமிழ் ஹைக்கூ பேரவையின் நிறுவனர் தமிழ்மாமணி தாழை இரா.உதயநேசன் அவர்கள் அச்சாதனையாளர்களில் முதன்மையானவர், பலருக்கும் முன்னோடியானவர். 

          கண்மூடித் திறப்பதற்குள் எத்தனை எத்தனை சாதனைகள், அத்தனையும் பறைசாற்றுகிறது அவரின் புகழினை என்றால் அது மிகையல்ல. நிறுவனர் அவர்களின் வழிகாட்டலில் நிர்வாக இயக்குனர் ரேணுகா ஸ்டாலின் அவர்களாகவும் சிறப்பு ஆலோசகர்களாக ஹைக்கூ ஜாம்பவான்களான ஓவியக்கவிஞர் அமுதபாரதி ஐயா மற்றும் கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் ஐயா , நிர்வாகி மேரிமுத்து அவர்களின் உறுதுணையோடும் ஹைக்கூ கவிஞர்களுக்கு ஓர் வரப்பிரசாதமாக 2022ம் ஆண்டு புத்தெழில் வழங்கும் புத்தாண்டு தினத்தில் அமெரிக்க முத்தமிழ் ஹைக்கூ பேரவை எனும் விதையூன்றப்பட்டது.

மெல்ல மெல்ல துளிர்விட்டு அற்புதமான கவியுறவுகளின் வருகையால் இன்று கிளை விரித்து நிழல் பரப்பும் ஆலமரமாய் விரிந்து நிற்கிறது. எண்ணற்ற பறவைகளின் வேடந்தாங்கலாய் இயற்கையையும் எதார்த்தத்தையும் இனிமையாய் ஹைக்கூ படைக்கும்  கவிஞர்களின் படைப்புகளால் மிளிர்ந்தது அமெரிக்க முத்தமிழ் ஹைக்கூ பேரவை.

முதல் 20 போட்டிகளும் வாரம் ஒருமுறை நிர்வாக இயக்குனர் ரேணுகா ஸ்டாலின் அவர்களை மட்டும் நடுவராகக் கொண்டு திறம்பட நடத்தப்பட்டது. மேரிமுத்து அவர்களின் கைவண்ணத்தில் உடனுக்குடன் சான்றிதழ் வழங்கப்பட்டது.

 அதன்பின் ஹைக்கூ வித்தகர்களான மருத்துவர் கவிஞர் கவிநிலா மோகன் அவர்கள், கவிஞர் கரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மற்றும் கவிஞர் பாண்டிச்செல்வி கருப்பசாமி அவர்கள் என அற்புத நடுவர்களோடு வாரத்திற்கு நான்கு போட்டிகளாக தொடர்ந்து அதிஅற்புதமாக நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு உடனுக்குடன் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து நமது நிறுவனர் அவர்களின் சீரிய திட்டமிடலில் 25வது போட்டியை சிறப்பிக்கும் விதமாக 2022 ஏப்ரல் 17ம் தேதி ஞாயிறன்று  அற்புதமானதோர் இணையவழி சாதனைக் கவியரங்கம் சிறப்பாக நடைபெற்றது. 

அக்கவியரங்கில் ஹைக்கூ ஜாம்பவான்  அமுதபாரதி ஐயா அவர்கள், முனைவர் ஆரூர் தமிழ்நாடன் அவர்கள், கவிஞர் அனுராஜ் அவர்கள், கவிஞர் இளையபாரதி கந்தகப்பூக்கள் அவர்கள், கவிஞர் டாக்டர் கவிநிலா மோகன் அவர்கள் என ஹைக்கூ உலகின் அத்தனை ஜாம்பவான்களும் தலைமையாக, முன்னிலையாக சிறப்புரையாளர்களாக பங்கேற்க ஹைக்கூ கவியுறவுகள் அனைவரின் பங்கேற்புடன் சாதனை கவியரங்கமாக நடைபெற்று சரித்திரத்தில் இடம் பெற்றது. 

ஒவ்வொரு மாதமும் குழுமத்தில் பதியப்படும் ஹைக்கூ கவிதைகளில் சிறந்த  கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.

குழுமத்தின் மற்றுமோர் மைல்கல்லாக 2022 ஜீன் 12ம் தேதி நமது குழுமத்தின் தொடர் நடுவர்களை தலைமையாகக் கொண்டும் ஹைக்கூ ஜாம்பவான்கள் பலரின் வாழ்த்துரையோடும் ஹைக்கூ கவிஞர்கள் பலரின் ஒன்றிணைவாக அற்புத ஹைக்கூ கவிதைகளோடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அரங்கேறியது இணையவழி அதிரடி உடனடி ஹைக்கூ உலக சாதனைக் கவியரங்கம்.

சீரிய திட்டமிடல் சிறப்பான செய்கைகள் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் நற்குணம் இவைகளைக் கொண்ட நம் குழும நிறுவனர்  தமிழ்மாமணி தாழை இரா.உதயநேசன் அவர்களின் வழிகாட்டலோடும், தொய்வின்றி தொடர்ந்து நடுவர்களாக சிறப்பிக்கும்
கவிஞர் கவிநிலா மோகன் அவர்கள், கவிஞர் கரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மற்றும் கவிஞர் பாண்டிச்செல்வி கருப்பசாமி அவர்களின் ஒன்றிணைவோடு அற்புதமாக நடந்தது அமெரிக்க முத்தமிழ் ஹைக்கூ பேரவை என்றே சொல்ல வேண்டும்.

75 ஆவது  சிறப்பு ஹைக்கூ போட்டி சிற்றுயிர்கள், தாய்மை, முன்பனிக்காலம், மழைக்கால இரவு என இயற்கை மற்றும் வாழ்வியல் தத்துவங்கள் உணர்த்தும் விதமான தலைப்புகளோடு  நிறுவனர் தமிழ்மாமணி தாழை இரா.உதயநேசன் அவர்கள் வழிநடத்த இப்போட்டியில் நமது குழும நிர்வாக நடுவர்களோடு சிறப்பு நடுவராக அற்புத கவிஞர் அமுதா தமிழ்நாடன் அவர்களும் கரம் கோர்க்க போட்டி நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு ஹைக்கூ வித்தகர் விருதுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நாட்கள் நகர்ந்தோட முதலாம் ஆண்டுவிழாவிற்கான நன்நாள் குறிக்கப்பட்டு கவிஞர்களை குதூகலிக்கச் செய்தது. ஆண்டுவிழாவே ஆரவாரம் அதிலும் ஆண்டுவிழாவில் 100வது போட்டி சிறப்பு ஹைக்கூ கவியரங்கம் அதுமட்டுமா ஹைக்கூ சிறப்பு தொகுப்பு நூல் வெளியீடு என தித்திக்கும் அறிவிப்புகள் கவிஞர்களை மகிழ்ச்சிக்கடலில் திக்குமுக்காட வைத்தது.

நிறுவனர் தமிழ்மாமணி தாழை இரா.உதயநேசன் அவர்கள் தொகுப்பாசிரியராகவும் அவர்களோடு இணைந்து இணைத் தொகுப்பு ஆசிரியர்களாக நிர்வாக இயக்குநர் ரேணுகா ஸ்டாலின் மற்றும் நமது நிர்வாக நடுவர்களாக கவிஞர் கவிநிலா மோகன் அவர்கள், கவிஞர் கரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மற்றும் கவிஞர் பாண்டிச்செல்வி கருப்பசாமி அவர்களின் கூட்டு முயற்சியால் 108 கவிஞர்களின் அற்புத ஹைக்கூ கவிதைகளோடு வெளியீடு காண தயாரானது.

வான்மழைக்கு காத்திருந்த நிலம் என ஆண்டுவிழா நாளுக்காக காத்திருந்த பல கண்களுக்கு விருந்தளிக்க அந்தநாள் வந்தது.  திருச்சி அருண் ஹோட்டல், சுமங்கலி மஹாலில் அமெரிக்க முத்தமிழ் ஹைக்கூ பேரவையின் ஆண்டுவிழா சிறப்பு ஹைக்கூ கவியரங்கம், சிறகு முளைத்த வானம் தொகுப்பு நூல் வெளியீடு, ஆளுமைகள் சிலரின் நூல் வெளியீடு, இலக்கிய ஆளுமைகள் பலரின் சிறப்புரை, வாழ்த்துரை, சிறுவர்கான சிறப்பு கவியரங்கம், பண்டைய கலாச்சார கலை நிகழ்வுகள், விருது வழங்குதல் என அற்புதமாக நடந்தேறி மனதைவிட்டு அகலாதிருக்கும் அற்புத நிகழ்வாக அமைந்தது. தேனடை போன்று தேனீக்களின் கூட்டாக கவிஞர்கள் வருகையால்  மிகச் சிறப்பாக நடந்து சரித்திரம் படைத்தது நமது அமெரிக்க முத்தமிழ் குழுமங்களின் முதலாம் ஆண்டுவிழா. 

அந்த நிகழ்வை மனதுள் அசைபோட்டபடியே ஓரிரு நாட்கள் ஓய்வுக்குப்பின் மீண்டும் தொய்வின்றி தொடங்கிய தொடர் பணிகளோடு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் கவிஞர்களுக்கு  எங்களது மனமார்ந்த நன்றிளைத் தெரிவிப்பதில் மகிழ்கிறோம். 

இரண்டாம் ஆண்டுவிழா சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்று நிறைவுற்றது. மூன்றாம் ஆண்டுவிழாவை எதிர்நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறோம்.

நம் அனைவரையும் ஒன்றிணைத்து நமக்கு ஆணிவேராக இருந்து உயர்த்திக் கொண்டிருக்கும்
அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவை,
அமெரிக்க முத்தமிழ் ஹைக்கூ பேரவை,
அமெரிக்க முத்தமிழ் சிறுவர் பேரவை,
அமெரிக்க முத்தமிழ் நூல் ஆய்வுப் பேரவை,
அமெரிக்க முத்தமிழ் ஆசிரியர் பேரவை,
முத்தமிழ் நேசன் இலக்கிய இதழ்,
அமெரிக்க முத்தமிழ் தொலைக்காட்சி போன்ற உலகத்தரத்தில் உயர் இலக்கிய அமைப்புகளைத் தொடங்கி நிறுவனராக இருந்து வழிநடத்துவதோடு அமெரிக்க முத்தமிழ் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் , உலக முத்தமிழ் கூட்டமைப்பின் நிறுவனராகவும் இருந்து நம் அனைவரையும் சிகரம் தொடச் செய்து கொண்டிருக்கும் தமிழ்மாமணி தாழை இரா.உதயநேசன் அவர்களை மனதார வாழ்த்தி நன்றிகளைத் தெரிவித்து அவரோடு கரம் கோர்த்து இலக்கிய உலகில் இமயம் தொடுவோம் ஒன்றிணைந்து உயர்வடைவோம் 

தமிழை நேசிப்போம் . . .
தமிழையே சுவாசிப்போம் . . .

                 என்றென்றும் அன்புடன்,
அமெரிக்க முத்தமிழ் ஹைக்கூ பேரவையின் 
நிர்வாக இயக்குனர் கவிஞர் ரேணுகா ஸ்டாலின்,
நிர்வாக நடுவர்கள் கவிஞர் கவிநிலா மோகன், கவிஞர் கரு.கிருஷ்ணமூர்த்தி  மற்றும் கவிஞர் பாண்டிச்செல்வி கருப்பசாமி 

0/Post a Comment/Comments