கடந்து வந்த பாதையின் காலடிச் சுவடுகள் (இதுவும் சுயசரிதையே)

 


#கடந்து_வந்த_பாதையின் #காலடிச்_சுவடுகள்

#பெயர் : பா.ரேணுகா தேவி (கவிதைத் தளங்களில் ரேணுகா ஸ்டாலின்)

#தாய்_தந்தை_பெயர் : ஆர்.எஸ்.பால்பாண்டியன் , பா.ஜெயலெட்சுமி

#உடன்_பிறந்தோர் : இரண்டு சகோதரர்கள் 

#கணவர் : எ.ஸ்டாலின் 

#மகள் : ரே.ஸ்.சபரிஸ்ரீ கௌசல்யா 

#படிப்பு : எம்.ஏ., பி.எட்., (தமிழ்), பிஜிடிசிஏ., 

#பணி : படித்த பள்ளியிலேயே கணினி அலுவலர். 

#ஊர் : திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி.

#லட்சியம் : மரணத்திற்குள் ஒரு நாளேனும் அரசுப் பணியாளராக பணியாற்றி மரணிப்பது. (என் விதி எப்படியோ தெரியவில்லை)

#பிடித்தது : எழுதுவது...எழுதுவது... எழுதுவது... புத்தகம் வாசிப்பது & பாடல் கேட்பது.

#பிடிக்காதது : நம்பிக்கை துரோகம் (காலம் பலமுறை துரோக துண்டாடல்களை காண வைத்து விட்டது)


அன்று முதல் இன்று வரை எனது வாழ்க்கை வலிகளும் வலிமையும் நிறைந்ததாகவே அமைந்துள்ளது. 4 வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைப்பதே கடினம் என்ற சூழ்நிலையில் 6 மாதங்கள் மருத்துவமனையில் வைத்து எமனிடம் போராடி மீட்டெடுக்கபட்டது எனது உயிர். 


அதன் பின் நடக்கவே முடியாது என டாக்டர்கள் சொல்ல எனது தாயாரின் பெரு முயற்சியால் நடக்கத் தொடங்கினேன். 7ம் வகுப்பு படிக்கும் போது கேலிபர் செருப்பு போட்டு நட்க்கத் தொடங்கினேன். 


அன்று முதல் தனி தைரியம் தன்னம்பிக்கை துளிர் விட்டது மனதில். அந்த தன்னம்பிக்கை கரம்பற்றி வாழ்வை தொடர்ந்தேன்.


ஆரம்பக்கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை அனைத்தும் பட்டிவீரன்பட்டி நா.சு.வி.வி. பள்ளிகளில் தான். படிக்கும் காலத்தில் இருந்தே கவிதை எழுதும் ஆர்வம் இருந்தது. சரியாக எழுதவில்லை எனில் யாரும் கிண்டல் செய்திடுவார்களோ! என்கின்ற அச்சம் இருந்த போதும் அவ்வப்போது எனது கிறுக்கல்கள் தொடர்ந்தது. 50திற்கும் மேற்பட்ட பக்கங்கள் அடங்கிய ஸ்பைரல் ஆல்பம் போட்டு பரிசாக கொடுக்கும் அளவிற்கு என்றால் எவ்வளவு கவிதைகள் எழுதியிருப்பேன் பாருங்கள். 


கவிதை எழுவதோடு நமக்கு பிடித்த சினிமா பாடல்களுக்கு சொந்த வரிகளில் எழுதி பாடுவது அப்போதே பிடிக்கும். 10ம் வகுப்பு படிக்கும் போது முதன்முதலாக வண்டிச் சோலை சின்ராசு படத்தில் செந்தமிழ் நாட்டு தமிழச்சியே பாடலுக்கு மாற்று வரிகள் எழுதி பாடி அனைவரது கைதட்டல்களையும் பெற்றது இன்றும் பசுமரத்தாணியாக மனதில் பதிந்துள்ளது.


அதன்பின்பு எனக்கும் எழுத்துக்குமான தூரம் ரொம்ப அதிகமானது. படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினேன். லாயர் அல்லது ஆர்த்தோ டாக்டர் ஆக வேண்டும் என்பது கனவு நம் போன்ற ஏழைகளுக்கு இதெல்லாம் எட்டாக்கனி என்று காலம் பொட்டில் அடித்தாற்போல் உணர்த்தியது.


12ம் வகுப்பிற்கு பின் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் சேர்ந்தேன். முதலாம் ஆண்டிலேயே தொடர முடியாமல் போக ஓராண்டு கணினிப் பயிற்சி முடித்து நான் படித்த பள்ளியிலேயே பணியில் சேர்ந்தேன்.


2009ல் திருமணம் குழந்தை என்று வாழ்க்கை வேறு திசையில் சென்றது. அதன்பின் எனது கணவரின் ஒப்புதலோடு  முதுநிலைப் பட்டம் வரை பெற்றேன்.

 

குடும்பம் , குழந்தை, பணி என்றிருந்த நான்  2015 முகநூல் வந்தேன். அதன் பின்பு என்னுள் இருந்த எழுத்தாற்றல்  மெல்ல எட்டிப் பார்த்தது. எட்டிப் பார்த்ததோடு அல்லாமல் துளிர்விட்டு வளரத் துவங்கியது. என் திறமை வெளி வர வேண்டிய நேரம் போலும் அதற்கேற்ற சூழ்நிலையும் அமைந்தது. 


2018ல் ஒரு விபத்தில் எழும்பு முறிவு ஏற்பட்டு ஆபரேசன் செய்து மருத்துவமனையில் இருந்தேன். அந்த காலகட்டத்தில் தான் முதன் முதலில் அமிர்தம் & தமிழ்ச்சேவை குழுமத்தில் கவிதைப் போட்டிகளில் எழுதத் தொடங்கி ஒவ்வொரு குழுமத்திலும் எழுதி எழுதி என்னுடைய எழுத்தாற்றலை மேம்படுத்திக் கொண்டேன். என்னுடைய மனதில் புதைக்கப்பட்ட ஒர் ஆசை உயிர் பெற்று சிறகடித்து பறக்கத் தொடங்கியது


தமிழ்மீதான காதலும், தளராத தன்னம்பிக்கையும் என்றென்றும் ஒருவரை எழுதத் தூண்டிக் கொண்டே இருக்கும். அந்தத் தூண்டுதல் தான் சாதாரண ரேணுகா தேவி பால்பாண்டியன் ஆக இருந்த என்னை எழுத்தாளர், கவிஞர் ரேணுகா ஸ்டாலின் ஆக மாற்றியது. புத்தகங்கள் வெளியிடும் அளவிற்கு உருவாக்கியது. 


2018 முதல் இன்று வரை 100க்கு மேற்பட்ட விருதுகள் (பல விருதுகள் நேரில் செல்ல முடியாத காரணத்தால் கைநழுவியது) 5000க்கு மேற்பட்ட  சான்றிதழ்கள் மற்றும்  சில நூறு விருதுச் சான்றிதழ்கள் பெற்றுள்ளேன். 500க்கும் மேற்பட்ட நடுவர் சான்றிதழ்கள் பெற்றுள்ளேன்.


பற்பல குழுமங்களில் நிர்வாகியாகவும், காணொளி கவியரங்க தலைமையாகவும், நெறியாளராகவும், சிறுகதை, புதுக்கவிதை, ஹைக்கூ போட்டிகளுக்கு  நடுவராகவும் பயணிக்கிறேன். ஹைக்கூ நடுவராக பயணிப்பது ஆத்மதிருப்தி தருவது. அமெரிக்க முத்தமிழ் ஹைக்கூ பேரவை குழும நிர்வாக இயக்குநராக இருப்பது மிகப் பெருமிதமானதாக கருதுகிறேன். 


எனது வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி ஊக்கப்படுத்தி உயர்த்தியது என்றென்றும் எனது குரு என்கின்ற மதிப்பிற்குரிய எழுத்தாளர் கவிஞர் சத்யா ஸ்ரீராம், அன்பு அண்ணன் பிரபு சந்திரன், ஆருயிர் அண்ணன் அமரர் ஒரத்தநாடு நெப்போலியன், அன்புச் சகோதரர் தமிழ்மாமணி தாழை இரா.உதயநேசன், த.அதியமான் அண்ணன், வேலு வாலசுந்தரம் அண்ணன், பாண்டிச்செல்வி கருப்பசாமி சகோதரி.


புதுக்கவிதை , சிறுகதை என்று மட்டும் எழுதிக் கொண்டிருந்த என்னை  ஹைக்கூ & தன்முனைக் கவிதைகள்  சிறப்பாக எழுத ஊக்கப்படுத்திய கவி ஆளுமைகள் பலர். இப்படி பெரிய பட்டியலே இருக்கு சொல்லிக் கொண்டே போகலாம்.


#வெளியிட்ட_நூல்கள் : 

1. புதைந்த பக்கங்கள் (சிறுகதைத்தொகுப்பு), 

2. இருளுக்குள் ஒளி ( கவிதைத் தொகுப்பு)

3. மனமெனும் சுதந்திரப் பறவை (தமிழ் & ஆங்கில தன்முனைக் கவிதை தொகுப்பு).


#வெளியீடு_காண_இருக்கும்_நூல்கள் :

1. போன்சாய் மரத்தடியில் புத்தர் (தமிழ் & ஆங்கில ஹைக்கூ கவிதை தொகுப்பு)


என்னைப் பொறுத்தவரை என் வாழ்வில் கவிதை எழுதுவது என்பது எனக்குள்ளான வலிகளைப் போக்கும் வலி நிவாரணி, கவலைகளை மறக்க வைக்கும் போதை சாதாரண போதையல்ல இராஜபோதை. 


குடும்ப முன்னேற்றம், குழந்தை வளர்ப்பு, வாழ்க்கை போராட்டம் இப்படி பல்வேறு சூழல்களில் வாழ்க்கை தொடர்ந்தாலும் என் ஆயுள் முழுதும் தமிழ் மீது தீராக்காதலுடன், எழுத்தெனும் இராஜபோதை தெளியாமல் சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களையும், நேர்மறை சிந்தனைகளையும் விதைக்கும்படியான கதைகளையும், கவிதைகளையும் எப்போதும் படைக்கும் ஆற்றல் பெற்று வாழும் வரம் பெற விரும்புகிறேன். நிச்சயமாக அவ்வரம் கிட்டும் என்கின்ற நம்பிக்கையோடு தொடர்கிறேன் என் எழுத்து பயணத்தினை. இன்னும் இன்னும் போராட வேண்டி உள்ளது உங்கள் வாழ்த்துக்களையும் வாரி வழங்குங்கள். போராடி வெற்றி காண்கிறேன்.


வாய்ப்பளித்து கௌரவித்த #குயில்களின்_கூடாரம்

மின்னிதழ் நிறுவனருக்கும், நிர்வாகிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி &

தங்களது சிறப்பான தமிழ் பணி தொடர  நல்வாழ்த்துகள்🌹🎉🎉


தமிழை நேசிப்போம் 

தமிழையே சுவாசிப்போம்


     என்றென்றும் அன்புடன்,

                  உங்கள்

         ரேணுகா ஸ்டாலின்,

                 எழுத்தாளர்,

               பட்டிவீரன்பட்டி

       திண்டுக்கல் மாவட்டம்.

0/Post a Comment/Comments