பெண் சுதந்திரம் (கட்டுரை)

 


#பெண்_சுதந்திரம்

"எல்லோருக்கும் எங்கும் எப்போதும் சுதந்திரம்" எனும் வாக்கிற்கிணங்க அனைவரும் அனைத்திலும்  சுதந்திரம் பெற்றுள்ளோமா!! என்றால் அதற்கான பதில் எவரிடமும் இல்லை.  மனித வாழ்வின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம் இவற்றோடு நான்காவதாக இணைந்திருப்பது  ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் சுதந்திரம். 

எவ்விடத்தில் ஒருவரின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறதோ!! அவ்விடத்தில் தொடங்குகிறது போராட்டம். நாட்டை பாதுகாப்பதில் தொடங்கிய சுதந்திரப் போராட்டம் , சமூகத்தின் சுதந்திரம், தனிமனித சுதந்திரம் , பெண் சுதந்திரம் இப்படி ஒவ்வொரு வகையில் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. 

நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதல் நடைபெறும் போராட்டங்கள் அனைத்திற்கும் ஏதாவது ஒருவகையில் நிரந்தரத்தீர்வோ!! தற்காலிக தீர்வோ!! ஏதோ ஓர் வகையில் தீர்வுகள் கிடைக்கப் பெறுகின்றன. இவற்றின் ஊடே  பெண்களுக்கான சுதந்திரம் முழுமையாகக் கிடைக்கப் பெற்று விட்டனவா என்றால் அது புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

நேற்று இன்று இப்படி எல்லாக் காலங்களிலும் பெண்களுக்கான சுதந்திரம் மீப்பெரும் போராட்டமாகவே இருந்து வந்திருக்கிறது. நாடு விடுதலை பெற போராடியவர்கள் விடுதலையின்றி தவிக்கும் பெண் இனத்திற்காகவும் போராடி தோற்று விட்டார்களோ!! என்றே எண்ணத் தோன்றுகிறது இன்றளவும் பெண்களின் நிலை. 

பெண் சுதந்திரம் என்பது எப்படிப்பட்டது என்பதை நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும். ஆணுக்கு பெண் நிகரெனக் காண் என்பது வார்த்தையில் மட்டுமே உள்ளது. பணி வாய்ப்பில் மட்டுமல்ல ஊதியம் பெறுவதிலும் கூட இம்முரண்பாட்டை அநேகமான இடங்களில் காண முடிகிறது.                 

பெண் சுதந்திரம் என்பதற்கு இன்றைய சமுதாயம் கொண்டிருக்கும் கருத்து சரியானதா என்றால் விடை பகர்தல் சற்று சிரமமே. பெண்கள் பல வழிகளில் தங்கள் சுதந்திரத்தை நிலை நாட்டுவதறகு போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அப்போராட்டம் சமுதாயத்தில் மட்டுமா என்றால் கண்டிப்பாக இல்லை பெண்ணாகப் பிறந்த நாள் முதல் தான் வாழும் வீட்டிற்குள்ளேயே தொடங்கி விடுகிறது.

பெண் சுதந்திரம் என்பது எவ்வகையிலும் அவர்களுக்கு இழுக்கு இன்றி அவர்களை பாதுகாக்கக் கூடிய வகையில்  அமைந்திருப்பதே ஆகும். பெண் சுதந்திரத்தில் முதன்மையான தடையாக இருப்பது பேச்சு உரிமை இன்றி இருத்தலே. அது வீட்டில் தொடங்கி பணியிடம், பொதுவிடம் என்று இப்பட்டியல் நீள்கிறது. 

இத்தடையை நீக்கி பெண்களுக்கு பேச்சு உரிமை  தருவதிலும் அதை நடைமுறை படுத்துவதிலும் அவர்களுக்கு சம உரிமை தர முற்பட வேண்டும். பேச்சுரிமை பெரும் பெண்கள் எவ்வித  தடைகளோ தயக்கமோ இன்றி தங்களது உள் உணர்வுகளை முன் வைக்க இயலும்.

இந்த விஞ்ஞான யுகத்தில் பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண் நடத்த வந்தோம் என்று பற்பல பட்டங்கள் பெற்று பார் போற்றும் உயர் பதவியை வகித்தாலும் அப்பதவியில் முடிவுகள் எடுக்கும் முழு சுதந்திரத்தை  பெற்று இருக்கிறார்களா என்றால் மௌனமே பதிலாகும்.

தங்கள் சுதந்திரத்தின் எல்லை எதுவென்று புரிதல் இல்லாமல் பல பெண்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள். கவர்ச்சியாக உடை உடுத்துவதில் தங்களின் சுதந்திரம் அடங்கி உள்ளது என்பது சில பெண்களின் எண்ணமாக இருக்கிறது. ஆன் பிள்ளைகள் போல் வெளியில் சுற்றுவதும், வரம்பு முறை இன்றி எல்லோரிடமும் பழகுவதும் தான் தங்களின் சுதந்திரம் என இன்னும் சில பெண்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். 

இவ்வாறான சுதந்திரம் பெண் பிள்ளைகளை பாழ்படுத்துமே தவிர பக்குவப்படுத்தாது. இயற்கை பெண்களுக்கு என்று சில கட்டுப்பாடுகளைக்  கொண்டிருக்கிறது. எப்போது இயற்கையை இடிந்துரைத்து பெண்களுக்கு அமைந்த கட்டுப்பாடுகள் மீறப்படுகின்றதோ அப்போதே அவர்கள் பல சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள். 

பருவ வயது பெண்கள் மட்டுமின்றி எல்லா வயதினரும் தங்களுக்கான சுதந்திரத்தை தற்காப்புடன்  கையாள வேண்டுதல் காலத்தின் கட்டாயம். சுதந்திரத்தின் எல்லையை மீறினால் அதனால் பாதிக்கப்படப் போவது பெண்கள் தான் என்ற புரிதல் அவசியம்.

சுதந்திரம் சொல்லும் போதே சொர்க்கமாயத் தோன்றும்...

சுதந்திரம் உயிர் உருகும்படியான உன்னதம்...

சுதந்திரம் சோர்ந்து போன மனதுக்குள் 

துளிர்க்கும் நம்பிக்கை...

சுதந்திரம் அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளின் வெடிப்பு...

ஆங்கிலேயர்களிடம் சுதந்திரம் பெற்று மீண்டதை மார்தட்டிக் கொண்டாடும் நாம் பெண்களுக்கு தேவையான சுதந்திரத்தை வழங்கி அவர்களின் முன்னேற்றத்தையும் கண்டு கொண்டாடுவோம்...

                   ரேணுகா ஸ்டாலின் ✍️

                        பட்டிவீரன்பட்டி

0/Post a Comment/Comments