சிறுகதை வாசிக்கலாம் வாங்க

 


#சிறுகதை


கிமு 1479 ஆம் ஆண்டு. நான் கிரேக்க நாட்டில் ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்தேன்.


அவள் பெயர் ரேஷ்மா. இந்தியா என்ற நாட்டை சேர்ந்தவள். 

என்னருகில் வந்தாள்.


"எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?"


" என்ன உதவி வேண்டும் சொல்லுங்கள்.என்னால் முடிந்தால் செய்கிறேன்"


என்னவாக இருக்கும். என் மனம் திகில் அடைந்தது. முடிந்தால் செய்வோம் என்று என் மனதைத் திடப்படுத்திக் கொண்டேன்.


" ஒரு மணி பர்ஸ் வாங்க வேண்டும். எந்த பிராண்ட்  நல்லா இருக்கும்"


அலுவலகத்தில் அத்தனை பேர் இருக்கும் போது எதற்காக என்னிடம் கேட்கிறாள் என்று யோசித்தேன்.


அடுத்த நாள்  என் பிறந்த நாள்.எனக்கு புரிந்து விட்டது.


சில வாலெட் பிராண்ட் களை Google உதவியுடன் தேடிச் சொன்னேன்.


"சரி .ரொம்ப நன்றி " என்றாள்.


எவ்வளவு கவித்துவமான செயல். எனக்கு ஆச்சரிய பரிசு கொடுக்க என்னிடமே ஆலோசனை கேட்கிறாள்.


" அது கிடைக்கவில்லை. வேறு பிராண்ட் வாங்கி விட்டேன்."


எதுவாக இருந்தால் என்ன? அன்புடன் என்ன கொடுத்தாலும் நான் அதை பெருமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்.


அடுத்த நாள் என் பிறந்த நாள்.


ரேஷ்மா அவள் பணியில் மும்முரமாக இருந்தாள். 


நடிக்கிறாள் கள்ளி என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.


ஒருவேளை பணி மும்முரத்தில் மறந்து விட்டாளோ?


வேண்டும் என்றே அடிக்கடி அவள் முன்னாடி சென்று நின்றேன்.


"என்னிடம் எதாவது சொல்ல நினைத்தீர்களா?" பொறுமை இழந்த நான் அவளிடம் சூசகமாக கேட்டேன்.


" எதுவும் சொல்ல நினைக்கவில்லை" என்றாள் ரேஷ்மா.


அலுவலகம் முடிந்து அவசரமாக வீட்டிற்கு கிளம்பிக் கொண்டு இருந்தாள்.


மிகவும் பொறுமை இழந்த நான் அவளை நிறுத்திச் சொன்னேன்.


" சாருமென க்நேனத்லியா" என்றாள்.


வேறு ஒன்றும் இல்லை கிரேக்க மொழியில் பிறந்தநாள் வாழ்த்துக்களை சொன்னாள்.


உடனே அவசரமாக வீட்டிற்கு கிளம்பிவிட்டாள்.


அப்போது கவனித்தேன். என்னுடன் அலுவலகத்தில் பணிபுரியும்  ராஜு அவனுடைய புதிய வாலெட்டை எடுத்து பார்த்துக் கொண்டு இருந்தான்.


நான் அவனிடம்

" இதை ரேஷ்மா கொடுத்தார்களா ?" என்று கேட்டேன்.


" ஆமாம். உங்களுக்கு எப்படி தெரியும்" என்று கேட்டான்.


நான் சிரித்து விட்டு அந்த இடத்தை விட்டு

நகர்ந்த போது என் தலை டமார் என்று முட்டிக்கொண்டது. 


நான் தான் தூக்க கலக்கத்தில் பேருந்தில் முட்டிக்கொண்டேன்.

என்னுடைய கிரேக்க தேசத்துக் கனவு சட்டென்று கலைந்தது.


நான் சட்டென்று இந்தியாவில் கி பி இரண்டாயிரத்து சொச்சதிற்கு மீண்டு வந்தேன்.


பக்கத்து சீட்டு பயணி என் முகத்தை உற்று பார்த்தார்.


" ராஜா ராஜா தான். எல்லா காலத்துக்கும்

எல்லா இடத்துக்கும் பொருந்தற மாதிரி பாட்டு போட அவரால் தான் முடியும்" என்றார்.


அப்போது பின்னணியில் ஓடிக்கொண்டு இருந்த பாடலை கவனித்தேன்.


**ஆசை வந்து என்னை

ஆட்டி வைத்த பாவம்

மற்றவரை நான் ஏன் 

குற்றம் சொல்ல வேண்டும்.**


"ஆமாங்க அவர் பாட்டு கிரேக்க நாட்டிற்கு கூட பொருந்தும்" என்றேன்.


"புரியல " என்றார்.


" நான் இறங்க வேண்டிய ஸ்டாப் வந்துடுச்சு. இன்னொரு நாள் சொல்றேன்" என்று இறங்கி விட்டேன்.


நான் இறங்கி நடந்து சென்று திரும்பிபார்த்தபோது கூட அவர் என்னைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தார்.


(முற்றும்).

0/Post a Comment/Comments