குழந்தை உள்ளம் சிறுகதை



குழந்தை உள்ளம் (சிறுகதை)


ராஜேஷ் தூங்குவது போல் படுத்து இருந்தான். ஆனால் தூங்கவில்லை. அம்மாவும் அக்காவும் பேசுவதைக் கேட்டுக் கொண்டு இருந்தான்.


ராஜேஷின் அக்காவிற்கு அன்று பிறந்தநாள்.அவளுக்கு 11 வயது. ராஜேஷ் 8 வயது சிறுவன். அன்று பள்ளி விடுமுறை. அம்மா சில வீடுகளில் சமையல் உள்ளிட்ட வேலை செய்து சம்பாதிப்பது அவர்களின் ஒரே வருமானம்.அப்பா இறந்து இரண்டு வருடம் ஆகிறது.

 

"ரம்யா , அப்பா போட்டோ பக்கத்துல உனக்கு பிடிச்சது வச்சிருக்கேன்.குளிச்சுட்டு வந்து  நல்லா கும்பிட்டுட்டு எடுத்துப்போட்டுக்கோ. கை  உள்ளே நுழைக்கத்  தெரியலேனா உடைச்சிடாத. நான் வந்து போட்டுவிடறேன்"


"ஹையா ,கண்ணாடி வளையலா ? தேங்க்ஸ் மா ."


"காலைலேயே  சீக்கிரம் கோவில் வாசல்ல போயி வாங்கிட்டு வந்துட்டேன். அப்படியே டீக்கடைல ரெண்டு பீஸ் கேக் வாங்கி வச்சு இருக்கேன். தம்பி பல் தேச்சதும் நீயும் தம்பியும் ஒன்னு ஒன்னு எடுத்துக்கோங்க.  நான் அடுத்த தெருவுல வேலைக்கு போயிட்டு சீக்கிரம் வந்துடுவேன் சரியா "


"சரி மா "


"நீயும் போன பொறந்த நாளுக்கே கண்ணாடி வளையல் வேணும்னு கேட்டே . இப்போ தான் பணம் சேர்த்து வாங்க முடிஞ்சுது. உங்க அப்பா இருந்திருந்தா நீ கேட்ட உடனே வாங்கிக் கொடுத்து இருப்பாரு. ஆண்டவன் நம்ம தலைல இப்படி எழுதி வச்சுட்டான். ராஜேஷு,  எழுந்து பல் தேய் டா.இவன் எப்போ தான் எழுந்துக்க போறான். தெரியலியே"


 


அம்மா போன பிறகு ராஜேஷ் ரகசியமாக பாதி கண் திறந்து பார்த்தான். உடனே எழுந்துக்கொள்ளாமல் கொஞ்சம் தூங்க வேண்டும் என்று நினைத்தான். அவனுக்கு மிகவும் பிடித்த கேக் சாப்பிடுவதற்காக சீக்கிரம் பல் தேய்க்க வேண்டும் என்று வேறு தோன்றியது.


ரம்யா அப்பா போட்டோ பக்கத்தில் ஏறி எதையோ எடுத்தாள். பீஸ் கேக் தான் எடுக்கிறாள். ராஜேஷ் ரகசியமாக பார்த்துக்கொண்டு இருந்தான்.சமையல் அறைக்கு செல்கிறாள். பின்பு குளிக்க செல்கிறாள்.


அவள் உள்ளே சென்றதும் தன் சந்தேகத்தை தீர்த்துக்கொள்வதற்காக அப்பா போட்டோ பக்கத்தில் சென்று பார்த்தான்.


ஒரு மஞ்சள் துணிப்பையில் வளையல்கள் இருப்பது தெரிந்தது . பக்கத்தில் கேக் இல்லை. தான் முழித்துக்கொண்டு இருப்பது தெரியாமல் ரம்யா ஏமாற்றிவிட்டாள் என்று அவனுக்கு புரிந்தது.


கேக் சுற்றப்பட்ட பேப்பர் குப்பைக்கூடைக்குள் கிடந்தது. ராஜேஷிற்கு அழுகை வந்தது. ரம்யா மேல் கோபமாக வந்தது. இன்று பிறந்தநாள், அம்மா அவளை அடிக்க மாட்டார்கள் என்பதால் அம்மாவிடம் சொல்லி பயன் இல்லை.


அவள் வளையல்களை எடுத்து ஒளித்து வைத்து 'எனக்கு தெரியாது' என்று சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தான்.


கண்டுபித்தால் அவனுக்கு தான் அடி கிடைக்கும். எப்படியும் ரம்யா தேடிக் கண்டுபிடித்து போட்டுக் கொள்வாள்.


தன் கிரிக்கெட் பேட் எடுத்து வந்து வளையல் பை மேல் அடித்தான். கண்ணாடி வளையல் நொறுங்கும் சத்தம் கேட்டது .ரம்யா இன்னும் குளித்துக்கொண்டு தான் இருந்தாள். பேட்டை இருந்த இடத்தில் மீண்டும் வைத்தான்.

 

ராஜேஷ் தூங்குவது போல் மீண்டும் சென்று படுத்துக்கொண்டான். ரம்யா குளித்து முடித்து அப்பா படத்திற்கு அருகில் வந்து வணங்கினாள் . அவள் துணிப்பையை திறந்து வளையல் உடைந்து இருப்பதை கண்டு அழப்போகும் நேரத்திற்காக காத்திருந்தான் .


அவள் ராஜேஷைப் பார்த்தாள். அவன் முழித்துக்கொண்டு இருப்பதை கவனித்தாள். அவன் நிதானமாக எழுந்து பல் தேய்த்தான். பின்பு ஜன்னல் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.


மாட்டுவண்டியில் ஒலிபெருக்கியில் சினிமா பற்றிய விளம்பரம் செய்து கொண்டு போனார்கள் . அந்த தெருவில் ஓரிரு வீட்டில் மட்டும் தொலைக்காட்சி உண்டு. ராஜேஷ் வீட்டில் தொலைக்காட்சி இல்லை.கிரிக்கெட் தான் அவன் ஒரே பொழுதுபோக்கு .  ராஜேஷின் கிரிக்கெட் பேட் டில் சச்சின்  மற்றும் கபில்தேவின் கையெழுத்தின் மாதிரி இருக்கிறது. அதைத் தொட்டுப் பார்த்து  பின்பு மானசீகமா இரண்டு சிக்ஸர்கள் அடித்துவிட்டு இருந்த இடத்தில் வைத்தான் .


ரம்யா அவன் அருகில் வந்தாள். அவள் கையில் இருந்த கிண்ணத்தில்  இரண்டு கேக் இருந்தன. ராஜேஷ் எதிர்பார்க்கவில்லை .


" அம்மா ரெண்டு வாங்கி கொடுத்துட்டு போனாங்க. அங்கே கொஞ்சம் எறும்பு இருந்துது. அதான் உள்ளே எடுத்து கிண்ணத்துல மூடி வச்சேன். "


ராஜேஷ் எதுவும் சொல்லாமல் ஒரு கேக் எடுத்து தின்றான். தான் அவசரப்பட்டு வளையல்களை உடைத்து  தவறு செய்துவிட்டது புரிந்தது.


அப்பாவின் போட்டோவை  மீண்டும் பார்த்தான்.  அப்பா மருத்துவமனையில் கடைசியாக அவனிடம் பேசிய வார்த்தைகள் அவன் காதுகளில் மீண்டும் ஒலித்தது.


"ரம்யா ,நீ இன்னொரு அம்மா மாதிரி தம்பிய நீயும் பாத்துக்கணும் சரியா ? ராஜேஷ் நான் சொல்றது உனக்கு புரியுமானு தெரியல. இருந்தாலும் சொல்றேன் . இனிமேல் நீதான் எல்லாம். நான் பாத்துக்கற மாதிரி ரம்யாவை பாத்துக்கணும் சரியா ?"


ராஜேஷ் சாப்பிட்டு முடித்தான். ரம்யா மீண்டும் அவன் அருகில் வந்தாள்.


" இன்னொரு கேக் கூட நீயே எடுத்து சாப்பிடு. உனக்கு இது ரொம்ப புடிக்கும்ல. எனக்கு புடிக்காது " . அம்மாவைப் போலவே பொய் சொல்கிறாள் .


"வேண்டாம் . நீயே சாப்பிடு " என்றான்.


"எனக்கு வேண்டாம். அடுப்பு பக்கத்துல வச்சிடறேன் நீயே அப்புறமா எடுத்து சாப்பிடு." என்று சொல்லி விட்டு ரம்யா வெளியில் சென்று  பக்கத்து வீட்டு பூனையிடம் " மியாவ் , மியாவ் " என்று பேசிக்கொண்டு இருந்தாள் .


இன்னும் அவள் உடைந்த வளையல்களைப்  பார்க்கவில்லை.


ராஜேஷ் அப்பா படத்தின் அருகில் வந்தான்.

 

"அப்பா ,தெரியாம கோவத்துல தப்பு பண்ணிட்டேன். இனிமேல் இப்படி பண்ண மாட்டேன். சாரிப்பா.


நான் ரம்யாவை நல்லா பாத்துக்கறேன்ப்பா. நீங்களும் ஹெல்ப் பண்ணுங்கப்பா"  என்று கண்கள் மூடி வேண்டிக்கொண்டான்.

 

" மியாவ்குட்டி , நான் கண்ணாடி வளையல் போட்டு வந்து காட்றேன் பாரு " என்று சொல்லி விட்டு உள்ளே வந்தாள் ரம்யா.


ராஜேஷ் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.அவன் கண்களில் ஈரம்.


அப்போது அம்மா வரும் சத்தம் கேட்டது.


" ராஜேஷ் எழுந்துட்டியா . சீக்கிரம் குளிச்சுட்டு வா கோயிலுக்கு போகணும் . நீ வளையல் போட்டு ரெடியாகலையா. எடுத்துட்டு வா நானே போட்டு விடறேன்."


ராஜேஷ் கண்களை மூடிக்கொண்டான்.


அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது. ஒரு பாட்டி வந்தார்கள்.


"அம்மா, காலைல கடைக்கு வந்து வளையல் வாங்கிட்டுப் போனியே. என் பொண்ணுதான்  வளையல் பையை மாத்திக்கொடுத்துட்டா. வாரா வாரம் ஒரு பெரியவரு , ஏதோ திருஷ்டி பரிகார பூஜை பண்ணனும்னு  கடைல உடையற கண்ணாடி வளையல் எல்லாம் வாங்கிட்டு போவாரு . அவருக்காக கட்டி வச்ச பை மாறிடுச்சு. 


உங்க வளையல் பை இங்கே இருக்கு. நான் வெளியூரு மா. உன்னோட அடையாளம் சொல்லி விசாரிச்சுட்டு வீட்டை  தேடி புடிச்சு வரேன் மா."

 

" நல்ல வேளை கொண்டு வந்தீங்க. இல்லேன்னா உடைஞ்ச வளையல் பார்த்து இவ அழுதுட்டு இருந்திருப்பா. இன்னைக்கு இவளுக்கு பொறந்தநாள் வேற "


" அப்படியா தங்கம். வா பாட்டி என் கையால புது வளையலை போட்டு விடறேன். மகராசியா தீர்க்காயுசா இருக்கனும் "


பாட்டி ரம்யா கையில் புது வளையல் போட்டுவிட்டார்கள்.


"பாட்டி " என்றான் ராஜேஷ்.


" என்ன ராசா . "


" எங்க அப்பா உங்ககிட்ட ஏதாவது சொன்னாங்களா "


பாட்டி " என்ன கண்ணு சொல்ற." என்றார்கள்.


பொட்டு வைக்கப்பட்டிருக்கும் அப்பாவின் படத்தை அனிச்சையாக எல்லாரும் பார்த்தார்கள்.


" ராஜேஷு. அம்மா கிட்ட வாடா. உடம்பு எதுவும் சரியில்லையா  "


அழுதுக்கொண்டு இருந்தான். அவன் கண்ணீரின் நிஜக்காரணம் யாருக்கும் புரியவில்லை.

 

[முற்றும் ]

                   ஆக்கம் 

           தமிழ்ச்செல்வன் 

0/Post a Comment/Comments