அற்புதமான சிறுகதை

 




சிறுகதை 


கல்யாணம் ஆன  20ஆவது நாளில் ஒரு வெள்ளிக்கிழமையில் அந்த கோர சம்பவம் நிகழ்ந்தது.  நீங்கள் நினைப்பது போல் பெரிதாக ஒன்றும் இல்லை. எனக்கும்  என் மனைவிக்கும் முதல் சண்டை.  சண்டை என்றால் சண்டை அல்ல ஒரு வாக்குவாதம்  அல்லது மனக்கசப்பு என்று சொல்லலாம் .


'' கல்யாணம் பண்ணதே பெரிய தப்பு ''  என்று நான் சொல்ல .  ''  ஏன் உயிரோட இருக்கனும்னு  தோணுது '' என்று அவள் சொல்ல எங்கள் சந்தோச நாட்கள் முடிவுக்கு வந்ததை என்னால் உணர முடிந்தது.


பிரச்சனை அவள் போட்ட காஃபியை நான்  விமர்சித்த போது தொடங்கியது. 

முன்பு ஊடல் பற்றி நான் படித்தது ஒன்றும் அப்போது கைகொடுக்கவில்லை.  அவளின் சொற்கள் மிகுந்த மனக்காயம் செய்தன .


என் பெயர் கவியரசன்,அவள் இலக்கியா. பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான். 10  நாட்களாகத்தான் சென்னையில்  இருவரும் தனியாக  (சேர்ந்து ) வசிக்கிறோம். 


எங்களுக்குள் பெரும் முரண்பாடுகள்.  எனக்கு கமல் பிடிக்கும் என்றால்   அவள் சிம்புவின் தீவிர ரசிகை ,  எனக்கு இளையராஜா .அவளுக்கு ஹிப்ஹாப் தமிழா , எனக்கு சுஜாதா , வைரமுத்து , ஜெயகாந்தன் . அவளுக்கு ராஜேஷ்குமார், பா.விஜய் , பாலகுமாரன்  etc .  இப்படி தொடங்கியது வாழ்க்கை .


காஃபி பிரச்சனை எங்களை கண்ணீர் சிந்த வைத்தது. அப்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது.


வீடு முழுவதும் அந்த  டப்பாவை  தேடினேன்.  கிடைக்கவில்லை.  தேடிக்கொண்டே இருப்பதை இலக்கியா பார்த்தாள்.


'' என்ன  தேடறீங்க'' என்றாள்.


'' ஒரு மஞ்சள் டப்பா பாத்தியா ''


'' எப்படி இருக்கும் ''


''  பென்சில் பாக்ஸ் மாதிரி இருக்கும் ''


''  நான் பக்கலியே ''  என்றாள் 


'' சரி ,  பாத்தா சொல்லு '' என்றேன் .


 '' அதுல என்ன இருக்கு ''


''  ரொம்ப முக்கியமானது .  டப்பா கிடைச்சா சொல்றேன் ''  


சனிக்கிழமை வேலைக்கு சென்று விட்டேன்.  மதியத்திற்கு பிறகு இலக்கியாவின் நினைவு அதிகம் வந்தது.

பெர்மிசன் கேட்டு கிளம்பினேன் .  நிறைய மல்லிகைப்பூ வாங்கினேன்.  ஹிப்ஹாப் ஆதியின் பாடல்களை பதிவிறக்கினேன்.  சிம்புவின் டிவிடிக்கள் தேடிப் பிடித்து வாங்கினேன் .  அப்படியே ராஜேஷ்குமார் , பாலகுமாரன்  கதைகள் வாங்கிக்கொண்டு வீடு சென்றேன்.  


அவளை சமாதானப்படுத்தினேன்.  தோசை சுட்டு கொடுத்தேன் . ஒன்றாக ஹிப்ஹாப் கேட்டு , சிம்பு பார்த்து . ராஜேஷ் & பாலா கதைகள்   படித்து சனி , ஞாயிறு குதூகலமாகக் கழிந்தது. 


 ஞாயிறு  இரவில் கேட்டேன்.

''  உனக்கு  வேற என்ன எல்லாம் புடிக்கும் ''


'' ஷாப்பிங் ''


'' இது என்னோட  க்ரெடிட் கார்ட் .  இது  ஏடிஎம் கார்ட் ,  ரெண்டுக்கும் ஒரே பின் நம்பர் .  2109,  எவ்ளோ வேணுமோ யூஸ் பண்ணிக்கோ ''  என்றேன் 


அவள் கண்களில் ஆனந்தக்கண்ணீர் துளிர்ப்பதை உணர்ந்தேன்.


ஞாயிறு பின்னிரவில் அவள் என்னிடம் அந்தக் கேள்வி கேட்டாள்.


''உங்க முதல் காதலி பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் , ப்ளீஸ் ''


''  அது வந்து , எப்படி சொல்றது தெரிலயே ''


''  நான்  தானே கேக்கறேன். எதுவும் நினைக்கமாட்டேன் சும்மா ஒரு ஃபிரெண்டா  நினைச்சு  சொல்லுங்க '' என்றாள்.


''  சொல்றேன். அவ என்னோட ஒரு நாள்  காதலி ''


'' ஒரு நாள்  தானா ''


'' ம்ம் . அது 2009 , நான் ஹைதெராபாத்ல வேலைக்கு  சேர்ந்த புதுசு.  வரங்கல்னு ஒரு டவுன்ல  என்னோட காலேஜ்   ஃபிரெண்டை   பாக்க போயிருந்தேன். பேரு ரவி  . அது லீவு நாள். காந்தி ஜெயந்தி.   அவன் கூட பேசிட்டு இருந்தேன். பக்கத்துல ஹனுமகொண்டானு ஒரு  டவுனுக்கு கூட்டிட்டு போயி ''மகதீரா''னு ஒரு படம் பார்த்தோம். அது பத்தி பேசிட்டு இருக்கும்போது மூடநம்பிக்கைகள் பத்தி பேச்சு வந்துச்சு ''


''  ம்ம் ,அப்புறம் ''


'' அவன் கொஞ்ச நாள் முன்னாடி அங்க ஒரு சித்தர  மீட் பண்ணனாம் .  அவர் இவன் கிட்ட ஒரு தாயத்து கொடுத்தாராம் .அதை வச்சு யாரை வேணா வசியம் பண்ணலாம். நாம நினைக்கறதை அவங்க செய்ய வைக்கலாம் .  ஒரே கண்டீஷன் முழு நம்பிக்கையோட தாயத்தை கையில வச்சுட்டு நாம நினைக்கணும்னு சொன்னாராம். அவனக்கு அதுல சுத்தமா நம்பிக்கை கிடையாது.அவனால முழுநம்பிக்கையோட சோதிச்சும் பாக்க முடிலனு என்கிட்ட அந்த தாயத்தை கொடுத்துட்டான். அதை வாங்கிட்டு நான் பஸ் ஏறிட்டேன் '


பஸ்ல போகும்போது ஒரு பொண்ணை பார்த்தேன். அவ எதிர்ல நின்னுட்டு இருந்த இன்னொரு பஸ்ல ஜன்னல்  பக்கத்துல உக்காந்து இருந்தா ''


'' அவ ரொம்ப அழகா இருந்தாளா ''


''  அவ சிவப்பு சுடிதார் போட்டு  ஒரு அழகான பிரஷ்ஷான   தக்காளி மாதிரி இருந்தா. நான் அவளையே பார்த்துட்டு இருந்தேன். அவ என்பக்கத்து சீட்ல வந்து உக்காந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சேன் . அவ டக்குனு அந்த பஸ்ல இருந்து இறங்கினா .  என்  பக்கத்துல உக்காந்து இருந்தவர் டக்குனு அவர் ஸ்டாப்பிங் வந்துடுச்சுனு சொல்லி இறங்கிட்டாரு . அந்த பொண்ணு என் பக்கத்துல வந்து உக்காந்துட்டா  ''


''  அப்புறம் ''


'' அவ கைல ஒரு  புக் வச்சிருந்தா.  '' Principles of  organic chemistry "அவ அந்த புக் ஓபன் பண்ணனும்னு நினைச்சேன் , ஓபன் பண்ணிணா , அதுல அவ பேர் இருந்திச்சு.  அவ பேர் சாதனா .  அவ எழுந்திருக்கணும்னு நான் நினைச்சா, அவ எழுந்திருக்கறா .  திரும்பனும்னு நினைச்சா , திரும்பறா.நான் என்ன நினைச்சாலும் அவ செய்யறா .


எனக்கு சந்தோசமா இருந்துச்சு.  ஆனா ரொம்ப நேரம் நீடிக்கல "


''என்னாச்சு ''


'' அடுத்த ஸ்டாப்ல ஒரு பையன் ஏறினான். இவ பக்கத்துல வந்து பேச்சுகுடுத்தான்.  ஆனா இவை என்னையே பாத்துட்டு இருந்தா.  அப்போ அந்த பையன் இறங்கி போகணும்னு நினைச்சேன் அவன் உடனே இறங்கிட்டான்.  அப்போ தான் கவனிச்சேன். அவன் கைல ஒரு  ரோஸ் வச்சிருந்தான் .  இந்த வசிய தாயத்து வச்சு லவ்வர்ஸ பிரிக்க கூடாதுனு தோணுச்சு . சாதனாவுக்கு  அவனை பிடிச்சு இருந்தா அவளும் இறங்கி போகட்டும்னு    நினைச்சேன்.அவ இறங்கி போயிட்டா . இது தான் என்னோட  ஒரு நாள் காதல் கதை ''  என்று இலக்கியவிடம் சொல்லி முடித்தேன்.


'' நீங்க ரொம்ப க்ரேட்டுங்க ''என்று என்னை புகழ்ந்தாள்.


அந்த இரவு இன்னும் அழகானது .


கதை இன்னும்  முடியவில்லை.  


மறுநாள் காலை அவள் என்னிடம் அந்த மஞ்சள் டப்பாவையும் என்னுடைய  கிரெடிட் , டெபிட் கார்டுகளையும்  கொடுத்தாள்.


''  இந்த தாயத்து எனக்கு நேத்தே கிடைச்சுடுச்சு, ஆனா வசிய   தாயத்துனு     நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது.  இதை வச்சு உங்களை வசியப்படுத்த எனக்கு இஷ்டம் இல்ல ''


நான் எதிர்பார்த்த ஒன்று.


'' உங்க மனசுல இன்னும் சாதனா இருக்கா, அதை என்னால தாங்கிக்க முடியல ''


''இல்ல இலக்கியா , நான் எப்போவோ மறந்துட்டேன் ''


''அவளை எந்த வருஷம் ,காந்தி ஜெயந்தி பாத்ததா சொன்னீங்க ''


'' 2009,  அக்டோபர் 2''


''  உங்க கார்ட் பின் நம்பர்  என்ன வச்சிருக்கீங்க ''


'' 2109''


'' இப்போ புரியுதா என்றாள் ''


நான் எதிர்பார்க்காத ஒன்று.


நான் அலுவலகம் சென்று திரும்பும்போது ஒரு தீர்வு யோசித்தேன்.


இலக்கியாவின் முகத்தில் இன்னும் சோகம் குடிகொண்டு இருந்தது.


''  உன்கிட்ட 2 விஷயம் சொல்லணும் '' என்றேன் 


'' சொல்லுங்க ''


''  தாயத்தை கோயில் உண்டியல்ல போட்டுட்டேன் ''


''ம்ம் ''  என்றாள் , சோகத்தில் மாற்றம்  இல்லை .


'' பின் நம்பர் மாத்திட்டேன் ''


''ம்ம் ''


''  புது பின் என்ன தெரியுமா ''


''ம்ம் '' .

 அதே சோகம்.


''  த்ரீ சிக்ஸ் நைன் ஜீரோ ''


அவள் முகத்தை உற்று கவனித்தேன் , 5 நொடிகளுக்கு பிறகு அந்த சோகம் ,வெட்கமாக மாறியது .


'' ச்சீ , போங்க ''  முகத்தை மூடிக்கொண்டு வெட்கப்பட்டாள். 


மீண்டும் அவள் முகத்தை உற்று நோக்கினேன்.  அவள் வெட்கத்தில் என் நெஞ்சத்தில் முகம் புதைத்து சிணுங்கினாள்.  நீண்ட நேரம் வெட்கத்தில் மூழ்கி இருந்தாள் .


'' நான் குளிச்சுட்டு வரேன் '' என்று சொல்லி குளியலறை சென்றாள்.  அது கோடைகால இரவு குளியல்.


நான் படுக்கையறைக்குள் வெற்றிப்புன்னகையுடன் நுழைந்தேன். 


அவசரப்படாதீர்கள். கதை இன்னும் முடியவில்லை.


என் படுக்கையில் சாதனா படுத்திருந்தாள்.


அதே சிவப்பு சுடிதாருடன் தலைக்கு கீழ்  வலதுகை  வைத்து 'அழகாக ' படுத்து இருந்தாள் .  பக்கத்தில் துப்பட்டாவும் organic chemistry புத்தகமும் கிடந்தன.  நகற்றி வைத்து சாய்ந்தேன்.


''  வாங்க , மிஸ்டர் கவியரசன் , என்ன என்ன வேலை எல்லாம் பண்றீங்க '' என்றாள் சாதனா .


''  அப்படி என்ன பண்ணிட்டேன் '' 


''  அந்த தாயத்தை நிஜமா உண்டியல்ல போட்டீங்களா ?''


''  இல்ல , ஆபிஸ் ட்ரால வச்சிருக்கேன் ''


'' நிஜமா அது காணாம போன மாதிரி தேடுனீங்க ?''


'' லுலுலாய்க்கு ''


''என்னை என்னோட லவ்வர்க்கு  விட்டு கொடுத்தீங்களா?''


'' அது இலக்கியவுக்காக சொன்னேன் '''


'' அந்த வசிய தாயத்து வச்சுதான் என்னை வசியம் பண்ணிங்களா ?''


''  வசியமும் இல்ல ,ஒன்னும் இல்ல .சின்னபுள்ளையா இருக்கும்போது காத்து கருப்பு அண்டக்கூடாதுனு எங்க அப்பத்தா எனக்கு அருணாக்கொடில கட்டி வுட்டுச்சு.அது ஞாபகமா ஒரு மஞ்சடப்பால போட்டு வச்சிருக்கேன் ''


'' பின்ன எப்படி இலக்கியாக்கு புடிச்ச மாதிரி  நீங்க நடந்துக்கறீங்க ''


''  அது சிம்பிள் , அவளுக்கு என்ன புடிக்கும்னு எனக்கு நல்ல தெரியும் அதை செய்யதுல எனக்கு என்ன கஷ்டம் ''


'' வசியம் பண்ணலேன்னா , நீங்க நினைச்சதை நான் எப்படி  செய்யறேன் '' 


''  நீ என்னோட ட்ரீம் கேர்ள் . கனவுக் காதலி ,  நான் நினைக்கறத நீ செஞ்சுதானே ஆகணும் ''


''  எனக்கு தலை சுத்துது , எது தான் நிஜம் . எது எல்லாம் கற்பனை ? ''


'' நாம சந்திச்ச அந்த நாள்  நிஜம் .  என்னோட காதல் நிஜம் .  இப்போ நீ இங்க இருக்கறது கற்பனை ''


'' நானே  சும்மாவா ''


'' காதல் நிஜம், காதலி மட்டும் கற்பனை .''


'' ஏடிஎம் கார்ட் பின் நம்பர் , நாம சந்திச்ச தேதி எப்படி மேட்ச் ஆச்சு ''


'' நீ எனக்கே தெரியாம  என்னோட ஆழ்மனசுல ஊறிட்ட  சாதனா ''


''சரி , நீ புது பின் சொன்னதும் எதுக்கு இலக்கியா ரொம்ப வெக்க படறா ''


'' அது உன்கிட்ட சொல்ல முடியாதே. எங்க 2 பேருக்கும் மட்டும் தெரிஞ்ச சீக்ரெட் ''


''  ஆமாம் , பெரிய ராணுவ ரகசியம் , நான் guess பண்ணிட்டேன் , நீங்க  ஒன்னும் சொல்ல வேண்டாம் ''


'' உங்களுக்கு என்னை பிடிக்குமா ? இலக்கியவ ரொம்ப புடிக்குமா ?''


''இலக்கியாவுக்கும் எனக்கும் இருக்கற ரிலேஷன் Life ,உனக்கும் எனக்கும் நடுவுல இருக்கறது லவ் ''


மகிழ்ச்சியில் சிரித்தாள் . கதவு திறக்கும் சத்தம் கேட்டது .


சாதனா காற்றில் கரைந்தாள் . இலக்கிய குளித்துவிட்டு ஈரமாக உள்ளே நுழைந்தாள் . தலைத் துவட்டிக்கொண்டே என்னை நெருங்கினாள்.


''  மனசு  ,எவ்ளோ சக்திவாய்ந்த ஆயுதம் இல்ல , தாயத்து மந்திரம் இதை எல்லாம் விட  நம்ம மனசுல பண்ற கற்பனைக்கு சக்தி அதிகம் . சரிதானே ''  என்றாள் இலக்கியா .


ஆர்க்கிமிடிஸ் போல,இவளும் குளியல் அறையில் ஞானம் அடைந்து வந்திருக்கிறாள் . கூடாது . எனக்கு ஆபத்து .


சாதனா வேறு அவ்வப்போது முறைக்கிறாள். 

 


''இலக்கியா , இன்னொரு உண்மை சொல்லவா ,  மனசுன்னு physical ஆ யாருக்கும் கிடையாது . virtual தான் மனசு இருக்குனு நினைக்கிறதே  நம்ம வலது மூளையோட கற்பனை தான் ''


'' எது தான்  நிஜம் ''


'' மூளை ,  ஹார்மோன்கள் , அதுங்க பண்ற organic chemistry. இவ்ளோ  தான் நிஜம்.''


என்னால் முடிந்த அளவிற்கு குழப்பி விட்டேன். 


'' உங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்குமா , இல்ல சாதனவா ?''


'' சாதனா கொடுத்தது லவ்  .  உனக்கும் எனக்கும் நடுவுல இருக்கறது Life '' என்றேன் .


இறுக்கமாக அணைத்தாள் .


சிரித்தேன் .


'' எதுக்கு இப்போ சிரிக்கறீங்க ''


'' அந்த  புது பின் நம்பர் சொன்னதும் நீ வெக்கப்பட்டது ஞாபகம் வந்துச்சு ''


'''  ஐய்யோ  போங்க நீங்க ''  மீண்டும் வெட்கம் மட்டும் அணிந்து கொண்டாள்.


சுபம் .


THE END . (author TAMIZH SELVAN)

0/Post a Comment/Comments