அறமுடைய வாழ்வு என்பது எது? கருத்தரங்கம்: 01

 


#கருத்தரங்கம்: 01

 

இன்றைய இணையதள 14-ஆம் கருத்தரங்கில் எமை தலைமையாக பணியமர்த்தியதில் அகமகிழ்வு கொள்கிறேன்.


📌 தலைப்பாக:

அறமுடைய வாழ்வு என்பது எது?


" தன்னிறைவைக் கொண்டு வாழ்வதா!?

 அல்லது

தான, தர்மங்கள் செய்து வாழ்வதா!? "


" அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்

புறங்கூறா னென்றல் இனிது "  (௱௮௰௧ - 181)


     அறத்தைப்பற்றி ஒருவன் புகழா விட்டாலும் பரவாயில்லை. மற்றொருவனைப்பற்றி புறம் கூறாமல் இருப்பதே சிறந்த செயல்.


  📌 2. தானம் vs தேள் சிறுகதை:


     ஒரு செல்வந்தன் கொஞ்ச காலமாக மிகுந்த கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்படுத்தப்பட்டான். அவனுடைய வாழ்வுச் சூழ்நிலை, வீட்டில் மனைவியால் பிரச்சனை, குழந்தைகளால் பிரச்சனை, உறவுகளால் பிரச்சனை, பொருளாதாரத்தில் பிரச்சினை என பல வகையான பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருந்தான்.


இப்படியான....

மிகுந்த மன உளைச்சலுக்கு இடையில் அந்த ஊருக்கு ஒரு சாமியார் வந்திருந்தார். அந்த சாமியாரிடம் பல பேர் சென்று தன்னுடைய குறைகளை கூறிய பொழுது, தானும் முன் வந்து அவரிடம் தனது குறைகளை சொல்லி குமுறலை  கொட்டுகிறார். அப்பொழுது அந்த சாமியார் சொல்கிறார் உன்னால் மற்றவர்களுக்கு இழைக்கப்படும் தீங்குகளை நீ புறந்தள்ளி, மற்றவர்களுக்கு உதவி செய்யும் தான தர்மங்களை வழங்கினால் உன்னுடைய கஷ்டங்கள் நீங்கும் என்று கூறுகிறார்.  உடனே அவன் என்ன செய்கிறான் தெரியுமா அவன் வீட்டு வாசலிலேயே ஒரு பந்தலை போட்டு அறுசுவை உணவுகளை அங்கு இருக்கக்கூடிய செல்வந்தர்கள் முதல் யாசகர்கள் வரை அனைவருமே அந்த உணவினை உண்டுகளிக்கும் விதமாக தானங்கள் செய்ய ஏற்பாடு செய்கிறார். அங்கு வந்த அனைவரும் உண்டு களித்து மனமகிழ்ச்சியுடன் செல்கிறார்கள். ஆனாலும் அவனுடைய கஷ்டங்கள் தீர்ந்தபாடில்லை. தொடர்ந்து கொண்டிருக்கிறது இதற்கான காரணம் என்ன!?


   📌ஒரு ஏழை ஒருவன் மிகுந்த கஷ்டங்களுக்கு இடையில் ஒரு நதிக்கரையை கடந்து செல்கிறான் அவன் மிகுந்த கஷ்டத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய வறுமையை போக்க, தனது மனக்குறையை போக்க என்ன வழி என்று தெரியாமல் புலம்பியபடியே கடந்து செல்கிறான். அப்பொழுது  அந்த நதியில் ஒரு தேள் சிக்கிக் கொண்டு தத்தளிக்கிறது. அதனை பார்க்கும் பொழுது அதை காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் மனதிற்குள் வருகிறது. அப்பொதே சருகு ஒன்றினை எடுத்து அதனிடம் நீட்டி அந்த சிறு சருகின் மூலம் எடுக்கும் பொழுது தவறி மீண்டும் வந்து தண்ணிக்குள் விழுகிறது. தண்ணிக்குள் விழுந்த தேளை மீண்டும் தனது கைகளால் எடுத்து தரையில் போடும் பொழுது அந்த தேள் அவனது கையினை கொட்டுகின்றது. வலிகளால் துடிக்கிறான். வேதனை அடைகிறான். அப்பொழுதும் அவன் அதற்காக வருத்தப்படவில்லை.அவன் மனதுக்குள் ஒரு சந்தோஷம் பொங்கி எழுகிறது. வலியிலும் வேதனையிலும் மனமகிழ்ச்சி கொள்கிறான். என்ன காரணம் என்றால் தான் ஒரு உயிரை காப்பாற்றி விட்டோம் என்கிற ஒரு பெருத்த நிம்மதிதான். இப்படியாக இந்த கதை முடியும் தருவாயில் ....


      முதலில் தான தர்மங்கள் செய்தவன், இவ்வளவு தான தர்மங்கள் செய்தும் அவனுக்கு மன நிறைவு ஏற்படவில்லை. என்ன காரணம் என்றால் அவன் தன்னுடைய குடும்ப மகிழ்ச்சிக்காகவும், தன்னுடைய வறுமையை போக்குவதற்காகவும் அவன் தான தர்மங்களை செய்வதை மட்டும் ஏற்றுக் கொண்டான். ஆனால் இந்த தேளைத் தூக்கி விட்டவன் மற்ற உயிர் கஷ்டப்படக் கூடாது என்பதை உணர்ந்து தான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை,  தேள் தன்னை கொட்டினாலும் பரவாயில்லை, என்று கருதி அந்த தேளை தண்ணீரில் இருந்து காப்பாற்றி வெளியே தூக்கி போட்டான்.          


       //தேளினுடைய தன்மை கொட்டுவது; மனிதனுடைய தன்மை அதனை காப்பாற்றுவது. //

இருவருக்கும் உண்டான வேற்றுமை இதுதான். 


அதுபோல இந்த இருவரின் செயல்களும் பாராட்டப்பட வேண்டியது என்றாலும், செய்வித்த முறையில் அவர்கள் மகிழ்ச்சி அடைந்ததனுடைய முறை வேறுபடுகிறது அல்லவா!?


அப்படியெனில் இங்கு எது சரியான அறம் என்பதை நீங்கள் உணர வேண்டும். தன்னுடைய சொந்த மகிழ்ச்சிக்காக தன்னுடைய சொந்த பொருளாதார பிரச்சினைக்காக தானம் செய்து ஊர் கூட்டி மகிழ்விப்பது என்பது ஒரு வகை செயல். அதில் "அறம் செய்தல்" என்பது இல்லை‌.


 ஆனால் ஒரு உயிர் வருத்தப்படுகிறது; வலி கொள்கிறது எனும் பொழுது, தன் வலியினையும் பொறுத்துக் கொண்டு அதனை தூக்கி வெளியில் விட்டவனே சிறந்த அறத்திற்கு உள்ளாகிறான்.


 இப்படியாக நிறைய விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருக்க முடியும். ஆனாலும் உங்களுடைய விளக்கங்களை கேட்க ஆசைப்படுகிறேன். 


 உங்களது உரையாடலை கேட்க மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன்.

என்னை ஏமாற்றாமல் உங்களது உரைகளை தொடருங்கள்.

 நன்றி வாழ்த்துக்கள்

 

✒️உங்கள் சோலை ராஜகுமாரன்.


               🔥எனது தீர்ப்பு:

  📌 இன்றைய கருத்தரங்க நிகழ்வில் அரிய கருத்துக்களையும், தத்துவங்களையும் உதிர்த்த அனைத்து உறவுகளுக்கும் என் வாழ்த்துக்கள். சில உறவுகள் நான் எதிர் பார்த்திராத அற்புதமான கருத்துக்களையும் வழங்கினர். அதற்காக மற்றவர்களின் கருத்துக்கள் ஏற்புடையவை அல்ல என்று அர்த்தமல்ல! 

மாதுளையின் முத்துக்கள் அனைத்துமே எப்படி ஒரே சுவையானதோ அதுபோலவே இங்கு நம் உறவுகளின் கருத்துக்களும்.....


      1)    ✅ புகழும் செல்வமும் பெரிதென கொள்ளா

அறமென வாழ்தலே அர்த்தமுள்ள வாழ்வதனால்...

இகழும் பொய்மையைக் கடத்தி

அறமெனும் தூய்மை நிரப்பி

காலங்கள் தாழ்த்தாது தர்மமெனும் கூற்றில்,

வறியோர் மகிழ வாழ்த்துக்கள் கூடவே

பெய்யென பெய்யும் மழையாய்

தொடரட்டும் அறமெனும் சுகமே!


பல்லக்கை சுமந்திடும் 

பரிதாபமானவன் போலன்றி 

பல்லக்கில் ஏறிடும் மகிழ்வாணன் போலவும்,

இன்பங்கள் கொண்டாடும்

அறமனிதனின் வாழ்வும்...!


குற்றம் களைந்து வாழ்தலின் இன்பம்

அறமெனும் அழகில்

தொடர்ந்திடும் நிகழ்வாய்

நான்கு தீய குணங்களை நகர்த்தி

நல்வழி பெற்றோர் அறத்தினோர் ஆதாரம்!


பணிவும் பெற்ற பாரியும் இங்கே

தருமனாய் மண்ணில் தடமும் பதித்தார்.

செயல்களில் சிறந்த மனிதனை மண்ணில்

தர்மத்தின் வழியில் தலைவனாய் கொள்வர்.


    2)   ✅  பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் என்னும் நான்கிற்கும்  சிறிதும் இடம் தராமல் ஒழுகி வருவதே அறம் ஆகும்.


        "அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்." (௩௰௫ - 35) 

என்று இதனையே இக்குறள் கூறுகிறது.


       3) ✅  "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது." (௪௰௫ - 45)


இல்லற வாழ்க்கையில் ஒருவன் அனைவரிடமும் அன்பு பாராட்டி பழகுவதும், தான் தேடிய செல்வங்களை அவர்களுக்கு பங்கிட்டு கொடுப்பதும் இல்வாழ்க்கையில் நல்ல பண்புகளுடன் பயனையும் அடைந்ததாக அறியப்படுவான்.


      4)   ✅  📌கெளசீக முனிவர் ஒருமுறை தவத்தில் ஈடுபட்டிருந்த பொழுது, மரத்தின் மேலிருந்த ஒரு பறவை அவர்மேல் எச்சத்தை இட்டு விட்டது. அதை பார்த்த கெளசீக முனிவருக்கு கடுங்கோபம் வந்து விட்டது. என்னை யாரென்று நினைத்தாய். நான் யார் தெரியுமா என்று கோபத்தின் உச்சியில் நின்று, அந்த பறவை சாம்பலாக போகும்படி சபித்தார். சற்று நேரத்தில் அந்த பறவையும் சாம்பலாக போயிற்று.


 இது நடந்த  மற்றொரு நாள் நதிக்கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது அவருக்கு தாகம் எடுக்க,  நதியில் நீரை குடிக்க இறங்கிய பொழுது அந்த நதியில் ஒரு காகம் நீராடிவிட்டு மேலே பறந்தது. அதை கண்ட கெளசீகருக்கு 

ஆத்திரம் தாங்காமல் காகம் குளித்த நீரை குடிப்பதா! இல்லை.... வேறு எங்காவது நீரை அருந்தலாமென்று சொல்லி நடந்து சென்றபோது அருகே ஒரு குடிசை தென்பட்டது.


குடிசையருகே சென்று அவர் கூப்பிட்டதும், அந்த குடிசையிலிருந்து எந்த குரலும் வரவில்லை. கடுங்கோபம் கொண்ட கெளசீகர், யாரது குடிசையினுள் இருப்பது! நான் யார் தெரியுமா? என்று கேட்ட மறு நிமிடமே, ஓ...நீங்கள் யாரென்று தெரியும். நான் என் கணவருக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தேன். அதனால் உடனே வர இயலவில்லை. ஆனால் உங்கள் குரல் கேட்டவுடன் நான் ஓடி வருவதற்கு உங்கள் அடிமையும் அல்ல; உங்கள் சாபத்தினால் நான் எரிவதற்கு பறவையும் அல்ல என்றவுடன், முனிவர் சற்று தடுமாறிப் போனார். 


நாம் சபித்து, அதனால் இறந்த அந்த பறவையை பற்றி இவளுக்கு எப்படி தெரியும் என்று சற்று தடுமாற்றம் கொண்டார். அவரே கேட்க, அவளின் பதிலாக வந்தது ஆச்சரியப்படும் படியான ஒரு பதில் வந்தது.


வனத்தினுள்‌ ஒருவர் இருக்கிறார். பெயர் மூலவளவன். அவரிடம் கேளுங்கள் சொல்வார். என்றவுடன்.....வனத்தினுள் நடந்தார். அங்குள்ளவர்களிடம் விசாரித்தார். அவர்கள் அங்கு மாமிச கடை வைத்துள்ளவனை காட்டி, இவர்தான் மூலவளவன் என்றனர். முனிவராக இருப்பார் என்று எண்ணி வந்த முனிவருக்கு ஏமாற்றமே கிடைத்தது.


அவனிடம் வினவ, எல்லா வினையையும் அறியும் வல்லமை உங்களுக்கு வர வேண்டுமென்றால் உங்கள் செயலில் கவனம் செலுத்துங்கள். உங்கள் செயலே உங்களை யாரென்று முன்னிறுத்தும்.


என் தொழில் கொலை செய்வது என்றாலும், அதில் நியாயமும், நிதானமும் என்னிடம் உண்டு. அந்த நிதானமே எனதான ஒழுக்கம். அந்த ஒழுக்கம் உங்களிடம் வந்திருந்தால் அந்த பறவையும் சாம்பல் ஆகி இருக்காது. நீங்களும் என்னிடம் வந்திருக்க மாட்டீர்கள். ஆகவே நிதானமே வாழ்வியல் ஒழுக்கம். அதுவே அறமென வாழும் அந்த பெண்மணிதான் உங்களை என்னிடம் அனுப்பியுள்ளார் என்று அந்த மாமிச வியாபாரி கூற..நிதானத்துடன் கெளசீக முனிவர் நடையை கட்டினார்.


    5) ‌ ✅  📌ராவணனின் ஒழுக்கம் எனும் அறம். (கதை)


இலங்கையை ஆண்ட ராவணன் எனும் அரசன் பல இடங்களில் அரக்கனாக பேசப்பட்டாலும், கொடூரமான கொலைகாரனாகவும், பக்தி நிறைந்த சிவபக்தனாகவும், சிறந்த போர்வீரனாகவும், மாயவித்தை கற்றவன் எனவும்,மாற்றான் மனைவியை அபகரித்தவன் எனும் அவப்பெயரை உலகம் பறைசாற்றிய போதும், அவனுக்கென ஒரு அறத்தை தன் வாழ்நாளில் கொண்டிருந்தான்.


அந்த அறம் அவனை உலகறிய செய்ததோ இல்லையோ, சீதையை கற்புடையவளாக நிரூபித்தது. ராவணனின் அறத்தில் சீதையின் கற்பு தெரிந்ததாக புராணங்கள் கூறினாலும், எனது பார்வையில் ராவணனின் கற்பே தெரிந்தது. அந்த கற்பையே அறமெனக் கூறுகிறேன்.


தன் சாம்ராஜ்யத்தில் தான் பெரிய அரசனாக வலம் வந்த ராவணன் நினைத்திருந்தால், சீதையின் கற்பை எப்போதோ இழக்க வைத்திருக்க முடியும்.  ஆனால் அவன் அதனை செய்யாமல் அவளுடைய சம்மதத்துக்கு காத்திருந்தான். அங்கேதான் அவன் கற்பு பேசப்படுகிறது.


( உண்மையில் அவளை ஆசைப்பட்டு தூக்கி வரவில்லை; அவளை அடையும் எண்ணமும் அவனுக்கில்லை. மாறாய் தன் தங்கை சூர்பனகையின் 

அவமானத்தை போக்கவே அதனை செய்ததாக புராணங்களே கூறுகிறது. அப்படியெனில் ராவணன் தூயமானவனே!  மாற்றான் மனைவியை அடையும் எண்ணம் அவனுக்கு இல்லை என்பதை இதன் மூலமே நாம் அறியலாம்)


        "பிறன்மனை நோக்காத பேராண்மை, சான்றோர்க்கு

அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு” என்கிறார் வள்ளுவர்."


(பிறன் மனைவியை விரும்பிப்பார்க்காத பேராண்மை, சான்றோர்க்கு அறம் மட்டுமன்று, நிறைந்த ஒழுக்கமுமாகும் ).


அப்படியான ஒழுக்கத்தில் ராவணன் வாழ்ந்துள்ளான் என்றால் அதுவே தனிமனித வாழ்வின் அறமுடைய செயலாகக் கருதுகிறேன்.


அறம் என்பது கட்டுபாடுகள் நிறைந்த இடத்தில் ஒழுக்கமாக இருப்பது அல்ல; கட்டுபாடுகளே இல்லாத இடத்திலும்கூட ஒருவன் ஒழுக்கமாக இருக்கிறான் என்றால், அதுவே தனிமனித வாழ்வில் அவன் செய்கின்ற மிகச்சிறந்த அறம்.


அப்படியான தனிமனித ஒழுக்கமுடைய வாழ்வில் மேன்மை கண்ட மனிதர்களின் வாழ்வியலில் காணப்படுகின்ற அறமே தன்னிறைவுடனான வாழ்வு எனக்கூறி இக்கருத்தரங்கை நிறைவு செய்கின்றேன். 


             6)   ✅மெய் மறந்து பொய்யுரைத்து

இன்பமதைக் கொண்டு

நகர்த்திடும் நாட்களெல்லாம்...


வன்மம் அதை அகத்தில் கொண்டு

கொடுஞ்செயல் தன்னை புறமாய் நிறுத்தி

நியாயம் பேசும் மனிதர் வாக்கில்...


ஆயுதங்கள் தீயில் சுட்டு

தீட்டுவதுபோல்

வஞ்சங்களும் வகைபார்த்து

கூர்மை தோயும் மொழிவார் தன்னில்....


அறம் சேரும் செயல்களை மறந்து

அதர்மம் கூட்டிடும் கெளரவர் சபைபோல்...


விழி நோக்கின் பாவம் சேர்த்து

தர்ம வழிபோகும்  பாதை மறந்து...


தீயினிற் சுடராய் வாக்குகள் பலித்து

தீச்சுடர் வகையறாய் வாழ்வதும் குற்றமே!


பால்ய வயதினில் ஏச்சுப் பிடிங்கிய இனிப்புகளும்

குருகுல படிப்பினில்

எழுதுகோல் திருட்டும்....


மிதிவண்டி பழகலில்

சிறுவனை மிரட்டிய எகத்தாளமும்...


பந்து விளையாட்டிற்கு

அம்மாவின் உண்டியல் உடைத்து சில்லரை திருடியதும்..,


பருவ வயதில் பத்மாவின் பருவைக் கிள்ளி வன்மம் செய்ததும்...


ஏகாந்த காதலியை ஏமாற்றி ஏக்கத்தில் தவிக்க விட்டதும்

அப்பாவின் சட்டைப்பையில்

ஐந்து ரூபாய் திருடியதும்


தங்கையின் மதிய உணவில்

மாற்றுதிசை பார்க்க வைத்து

ஊறுகாயை ருசி பார்த்ததும்...


தீபாவளி திருநாளன்று

தன்மீது மோதியே

பேருந்தினுள்  அடிபட்ட 

எவனோ ஒருவனின் 

பாவத்தை சுமந்தே...,


நாட்களின் மொத்தமும்

பாவத்தின் குத்தகையாய்

நாள்தோறும் வளரும் கணக்கை மறந்து...


உத்தமன் நானென்று

ஊர் நின்று பேசுவதும்

ஊராரின் பாவம் மட்டும்

கணக்கிட்டு வாதிடுவதும்


எச்சத்தின் உமிழ்நீரில்

வாழ்வதற்கு சமமென்று

குற்றத்தால் நிறைகிறேன்

குற்றவாளியாக நானும்!

என்று கூறி  விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.

✒️ மதுக்கூர். சோலை ராஜகுமாரன். மே 09.

0/Post a Comment/Comments