பாசம் தேடும் புலிகள் (சிறுகதை)

 பாசம் தேடும் புலிகள்

 (..சிறுகதை..)



இன்னைக்கும் குளிக்கணுமான்னு தினமும் தோன்ற வைக்கும் குளிர் ஊட்டி.. 

மலைப்பகுதியில் ஒரு ஆடம்பர பங்களா..  

அஞ்சு அந்த பங்களாவில் தான் வசிக்கிறாள் தன் ஐந்து வயது மகன் மஹியுடன்... 

உதவிக்கு மூன்று வேலையாட்கள்.. ட்ரைவரைத் தவிர மற்ற இரண்டு பேரும் பெண்கள்.. 


காலை ஆறு மணி... 

படுக்கையில் இருந்த அஞ்சுவின் செல்போன் அழைத்தது.. 

இந்நேரத்தில் யாராக இருக்கும் என்று யோசித்தவாறே செல்போனை எடுத்துப் பார்த்தாள்.. 

ட்ரைவர் பாஸ்கரன் அழைத்திருந்தார்.. 

பாஸ்கரன் பாசக்காரன்.. 

தனது வேலையில் சாகசக்காரன்.. 

எந்த நேரத்திலும் அழைத்தாலும் ஓடி வந்து உதவி செய்து கொடுப்பதில் நேசக்காரன்.. 

ஹலோ.. என்ன பாஸ்கரன்.. 

இந்த காலைல..? 

அம்மா.. நாளைக்கு தானே சார் வர்றார்..?


ஆமா.. நாளைக்குன்னா நீங்க இன்னைக்கு நைட் எட்டு மணிக்கெல்லாம் புறப்பட்டு ஏர்போர்ட் போயிடனும்..

காலைல மூணு மணிக்கு ஷார்ப்பா பிளைட் லேண்ட் ஆயிடும்.. 

அதான் மா.. 

பிளைட் டைம் சரியா தெரியல.. 

நீங்க கவலைப்படாதீங்கம்மா.. 

எவ்வளோ ஸ்லோவா  ஓட்டினாலும் மூன்றரை மணி நேரத்தில் கோயம்பத்தூர் போயிடுவேன்.. 

தாய்மை போற்றுவோம்-சிறுகதை - இங்ஙே

அதான் எனக்கும் தெரியுமே.. இருந்தாலும் உங்களுக்கு ஞாபகப்படுத்தினேன்.. 

ரைட்.. 

இன்னைக்கு நீங்க வரவேண்டாம்.. 

ரெஸ்ட் எடுத்துக்கோங்க.. 

நைட் உங்களுக்கு தூங்க முடியாது இல்ல..?

சரி மா.. நன்றி மா.. 

போனை அணைத்துவிட்டு மகனை எழுப்பினாள் .. 

மஹி.. எந்திரி.. யோகா பண்ணலாம்.. டைம் ஆச்சு..


புரண்டு படுத்த மஹி..

"..இன்னும் கொஞ்ச நேரம் மா.." என்று முனகினான்..

டைலி உனக்கு இதே வேலையாச்சு.. 

நாளைக்கு அப்பா வர்றாங்க.. தெரியும்ல..? 

உன் மேல இருக்கற கம்பளைண்ட் எல்லாம் கம்ப்ளீட்டா சொல்லப் போறேன்..


படுக்கையில் இருந்து சடாரென்று எழுந்த மஹி.. 

போம்மா.. நீ என்ன சொன்னாலும் அப்பா எனக்கு தான் சப்போட் பண்ணுவார்..

அப்பனும் மகனும் எப்படியோ போங்க..

சரி வா.. டைம் ஆகுது.. 

யோகா முடிச்சுட்டு.. கிரிக்கெட் கோச்சிங் போகணும்ல..? வா..

கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்தான் மஹி..   


அஞ்சுவின் கணவர் கோபன்.. அவர்க்கு கனடாவில் வேலை.. 

என்றாலும் வருடத்திற்கு இரண்டு முறை வந்து  ஊட்டியில் தனது எஸ்டேட் வியாபாரத்தையும் மேற்பார்வை இட்டுச்செல்வது வழக்கம்..

நாளை அவர் வரவிருக்கிறார்.. 


அஞ்சுவும் மஹியும் தங்களது யோகா உடைகளை அணிந்து கொண்டு.. மாடிப்படி ஏறி முதல் தளத்தின் பால்கனிக்கு வந்தார்கள்.. 

அஞ்சு அங்கு இருந்த கம்பளத்தை எடுத்து விரித்தாள்...

"அம்மா.. அம்மா..." 

மஹி குரலில் ஏகப்பட்ட பயத்தோடு அழைத்தான்.. 

என்னடா என்று சலித்தவாறே அவனை நோக்கினாள் அஞ்சு...

அங்க பாரு... என்று தனது பிஞ்சு ஆட்காட்டி விரலைக் காட்டினான்... 


மஹி காட்டிய திசையில் பார்த்த அஞ்சுவிற்கு பயத்தில் இதயமே நின்று விடும்போல இருக்க ஸ்தம்பித்து நின்றாள்...

அங்கே பங்களா கேட்டுக்கு வெளியே புல்வெளியில் ஒரு பயங்கரமான பார்வையோடு புலி ஒன்று அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தது....

                             ---------

1942-ஆம் ஆண்டு... 

ராமசாமி கவுண்டர் நொய்யல் ஆற்றில் குளித்துவிட்டு கரையேறினார்.. 

அருகே வந்த வேலைக்காரன் காசியிடம் தனது ஆடைகளை வாங்கி உடுத்திக்கொண்டார்..

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குதிரை ராட்டின வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டார்.. 

பவ்யமாக நின்று கொண்டிருந்த காசி குதிரை வண்டியில் ஏறி சாட்டையை சுழற்றி அடிக்க.. 

குதிரை வண்டி புறப்பட்டது..


டே காசி...

சொல்லுங்கய்யா..

இன்னைக்கு அம்மா டவுனுக்கு ஒரு கல்யாணத்துக்கு போறா.. 

நீ என்ன பண்ற.. போன வாரம் கூட்டியாந்தியே.. 

அவ பேரென்ன.. ஹ்ம்.. சுந்தரி.. 

அவளை பத்து மணிக்கு கூட்டியாந்துடு..

சரிங்கய்யா.. 


சீம சரக்கு கூட முடிஞ்சு போச்சு.. அதையும் வாங்கிக்க..

சரிங்கய்யா..

என்னை இறக்கி விட்டுட்டு குதிரைக்கு தீனிபோட்டு வை.. 

அம்மாவுக்கு தெரியாம நானே உன்கிட்ட வந்து காசு தரேன்.. புரிஞ்சுதா..?

புரிஞ்சுதுங்கய்யா..


ஹா ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்.. 

நம்ம பாய் கிட்ட சொல்லி நல்ல தொட கறியா ஒரு நாலு கிலோ ஆட்டுக்கறி வாங்கிக்க...

ஒரு கிலோ காரமா சமைச்சுடு.. 

மீதி மூணு கிலோவ...

புரியுதுங்கய்யா.. 


நம்ம புலிக்கு போட்டுர்றேனுங்க..

புலின்னு சொன்னா எட்டி மூஞ்சிலேயே உதப்பேன்.. 

சாமின்னு சொல்லணும்..

அப்படியே ஆகட்டுங்க.. 

நம்ம சாமிக்கு போட்டுறேனுங்க..


குதிரை வண்டி அந்த பிரம்மாண்ட பங்களா முன் நின்றது... 

வண்டியிலிருந்து கம்பீரமாக இறங்கி உள்ளே சென்றார் ராமசாமி கவுண்டர்..

அதே பயங்கரத்தோடு தாவி வந்த.... 

புலி ஒன்று எம்பிக் குதித்து ச்செல்லமாய் அவரை கட்டிக்கொண்டது..

                           ---------

2020-ஆம் ஆண்டு..

மிடுக்கோடு இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அஞ்சுவிடம் "..பயப்படாதீங்க மேடம்.. 

அந்த புலியை கூண்டில் அடைச்சு காட்டுக்குள்ள விட்டாச்சு.."

அதெல்லாம் சரி சார்.. 

ஆனா பொது மக்களுக்கு என்ன பாதுகாப்பு..


மேடம்.. 

கொஞ்ச காலமாகவே இந்த ஏரியாவுல காட்டு மிருகங்கள் நடமாட்டம் அதிகமாயிட்டு இருக்கு.. 

நாம தான் பாதுகாப்பா இருக்கணும்.. முடிஞ்ச வரை ராத்திரி வெளில வர வேண்டாம்.. 

அதிகாலை வாக்கிங் வேண்டாம்.. 

இதெல்லாம் பொது மக்கள் கிட்ட கூவி கூவி சொல்லிட்டு தான் இருக்கோம்.. 

ஆனாலும் யாரும் கேட்ட மாதிரி இல்ல.. 


அருகே இருந்த பாரஸ்ட் ஆபீசர்.. 

"..மேடம் நீங்க எதுக்கும் பயப்படாதீங்க.. 

கொஞ்ச நாள் தான் எல்லாம் கட்டுக்குள் வந்துவிடும்.. 

அதுவரைக்கும் இன்ஸ்பெக்டர் சார் சொன்ன மாதிரி நடந்துக்கோங்க.."


பை தி வே.. 

உங்க ஹஸ்பண்ட் நாளைக்கு அதிகாலை வர்றதா கேள்விப்பட்டேன்.. 

அவரை கோயம்பத்தூர்லேயே ரெண்டு மணி நேரம் இருக்க சொல்லுங்க.. 

காலைல ஆறு மணிக்கு அங்கிருந்து புறப்பட்டார்-னா இங்க ஒன்பதரை மணிக்கெல்லாம் வந்துடலாம்.. அதுதான் சேஃப்ட்டி.. 


நன்றி சார்... 

அஞ்சு கூறியவுடன் இன்ஸ்பெக்ட்டரும் பாரஸ்ட் ஆபீசரும் எழுந்து பங்களாவை விட்டு வெளியே வந்தனர்.. 

ஜீப்பில் அமர்ந்து கிளம்பினார்..

அஞ்சு எழுந்து சமையலறைக்கு சென்றாள்.. 


மேலே மாடியில் சிறு சப்தம்... உர்.. உர்... என்று..

அஞ்சுவிற்கு புரிந்தது.. 

இது புலியின் உறுமல் சப்தம்... 

உடனே மஹியை தேடினாள்.. 

மஹி  மஹி... எங்கடா இருக்கே..?

மஹியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை... 

ஆனால் அந்த புலியின் உறுமல் சப்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது... 

மஹி.. மஹி.. டேய் மஹி.... 

அந்த பங்களாவே அதிரும்படி கத்தினாள்.. என்றாலும் பதில் இல்லை..


உர்ர்..உர்ர்... புலி உறுமும் சப்தம்... 

அந்த சப்தம் எங்கிருந்து வருகிறது என்பதை உன்னிப்பாய் கேட்டாள்..  

அந்த சப்தம் வரும் திசையை கவனித்து அந்த திசை நோக்கி நடந்தாள் .. 

மேலே மாடியில் படுக்கை அறை பால்கனியில் இருந்து வருகிறது.. உணர்ந்து கொண்டாள்.. 

மெதுவாக மாடிப்படி ஏறினாள்.. படுக்கை அறைக்குள் நுழைந்தாள் .. மஹி இல்லை.. 

ஆனால் புலி உறுமிக்கொண்டே இருந்தது.. 

அடி மேல் அடி வைத்து பால்கனி நோக்கி போனாள்.. 

பால்கனியின் கதவை சப்தமே வராமல் மெதுவாக திறந்தாள்.. அங்கே.....


மஹி ஜாலியாக உக்காந்து செல்போனில் வீடியோ கேம் ஆடிக்கொண்டு இருந்தான்.. 

என்னடா பண்ற..? 

அம்மா.. புதுசா ஒரு கேம் மா.. 

இப்பதான் டவுன்லோட் பண்ணேன்.. ஒரு ஆள் புலியை கொல்லுவான்.. 

புலியோட குட்டி வளர்ந்து பெரிசாகி... அந்த ஆளை பழி வாங்கணும் .. அதுதான் கேம்.. 

அஞ்சு அச்சமானாள்.... 

                            ---------

1942-ஆம் ஆண்டு..

ராமசாமி கவுண்டர் தனது பிரத்யேக அறையில் சொகுசு நாற்காலியில் அமர்ந்து இருந்தார்.. 

கையில் தந்தை பெரியாரின் குடியரசு இதழ்.. 

முன்னால் இருந்த சின்ன மேசையில் சரக்கும் சைட் டிஷ்ஷாக நாட்டுக்கோழி வறுவலும்... 

அவரது இடது பக்கம் புலி முன்னங்கால் இட்டு அமர்ந்து இருந்தது.. 

நாக்கு தொங்கி இருந்தது... 

அந்த நாக்கினால் ராமசாமி கவுண்டரின் புறங்கையை வருடிக் கொண்டே இருந்தது... 


 வேலைக்காரன் காசி பவ்யமாய் உள்ளே வந்தான்.. 

என்னடா காசி கன்னத்தில காயம்.. பெரிய காயமா இருக்குது....?? 

ஐயா. அது ...

ஒண்ணுமில்லீங்க..

அட சும்மா சொல்லு.. 

உன் பொண்டாட்டி அடிச்சுட்டாளா..?

அது இல்லீங்க.. 

பின்ன.. சொல்லு..


ஐயா.. 

நம்ம சாமி முன்ன மாதிரி இல்லீங்க.. இப்பவெல்லாம் ரொம்ப முரடனா மாறிடுச்சு.. 

என்னடா சொல்ற... 

பார்ரா .. எவ்வளவு அன்பா என் கையை நக்கிட்டே இருக்குனு.. என் புள்ள டா.. 

ஆனா.. ஐயா... 

நேத்து மாட்டுக்கறி போட்டப்ப...

போட்டப்ப..??

என் மேல எகிறி கன்னத்தில கடிச்சுடுச்சுங்க... 

நீங்க கூட கொஞ்சம் பாத்து கவனமா இருங்க..

போடா.. அது என் புள்ள டா.. 

ஒரு புள்ள பொறந்தா.. அதை புலி மாதிரி வளக்கணும்னு நினெச்சிட்டு இருந்தேன்.. 


இனிமே புள்ள பொறக்க வாய்ப்பு இல்லேனு தெரிஞ்சப்பறம்.. 

இந்த புலியையே புள்ளையா  நினைச்சு வளக்க ஆரம்பிச்சேன்.. என்று கூறிக்கொண்டே புலியின் பிடறியில் வருடிக்கொண்டார்... 

புலி அவரது புறங்கையை நாக்கால் வருடியது..

அதெல்லாம் தெரியுங்கயா.. இருந்தாலும் நீங்க கொஞ்சம்... 

போடா போ போ.. அந்த சரக்கை எடுத்து இந்த குவளைல ஊத்திட்டு போ.. 

மீதமிருந்த சரக்கை குவளையில் ஊற்றிவிட்டு.. 

ஒரு கும்பிடு போட்டுவிட்டு காசி வெளியேறினான்.. 


கவுண்டர் கையில் இருந்த குடியரசு இதழை படிக்க ஆரம்பித்தார்.. 

புலி புறங்கையை நாக்கினால் வருடிக்கொண்டே இருந்தது.. 

சட்டென்று.........  


அவரது புறங்கையில் ரத்தம் வழிந்தது.. புலியின் முன் பல் அவரின் புறங்கையை கீறி விட்டு இருந்தது..

லேசாக அவரது புறங்கையில் ஒரு எரிச்சல் ஏற்பட்டது.. சட்டென்று கையை விலக்கினார்.. 

உர்ர்...  உர்ர்ர்ர்ர்ர்.. உர்ர்ர்ர்ர்... உர்ர்...  உர்ர்ர்ர்ர்ர்.. உர்ர்ர்ர்ர்... 

உர்ர்...  உர்ர்ர்ர்ர்ர்.. உர்ர்ர்ர்ர்... 

புலியின் உறுமலில் ஒரு வெறி... ராமசாமி கவுண்டர் உணர்ந்து கொண்டார்.. 

காசி.. நீ கரெக்ட்டா சொன்னடா... என்று மனதில் நினைத்துக்கொண்டார்.. 

அவருக்கு தெரியும்.. 

இப்போது நாம் என்ன செய்தாலும் அது நம்மை கடித்து குதறி விடும்.. என்ன செய்யலாம்..?? 

தீவிரமாக யோசித்தார்.. 


தனது இடது புறங்கையில் வழியும் ரத்தத்தை புலி சுவைத்துக் கொண்டிருந்தது.. 

இருந்தாலும் அவர் கலங்கவே இல்லை... 

மனம் தளரவில்லை..

தனது முன்னால் இருந்த மேஜையில் இருந்த குவளையை எடுத்து அதில் முழுதாக இருந்த சரக்கை ஒரே மூச்சில் குடித்து விட்டு குவளையை மெதுவாக வைத்தார்.. 

வலது புறம் இருந்த மேஜையின் அறையை திறந்தார்.. 


வலது கையால் உள்ளே இருந்த பிஸ்டலை எடுத்தார்.. வெள்ளைக்காரன் பரிசாக கொடுத்த துப்பாக்கி.. 

குடியரசு இதழை படிப்பது போல பாவனை செய்து கொண்டே... 

துப்பாக்கியால் புலியின் தலைக்கு குறி வைத்தார்.. மொத்தம் இருந்த ஆறு தோட்டாக்களையும் ஒரு சேர அமர்த்தினார்.. 


ஷூட்.....

புலியின் ரத்தம் தெறித்து பரவியது..  

புலியோ  கொஞ்சம் கொஞ்சமாய் தளர்ந்து விழுந்தது.. 

எல்லாமே இரண்டு நிமிடம் தான் .. 

புலி மரணித்து படுத்து இருக்க.... 

அதனை கட்டிப்பிடித்து.. ஓ என்று அலறி அழ  ஆரம்பித்தார் அந்த பாசமுள்ள ராமசாமி கவுண்டர்..

                          ---------

2020-ஆம் ஆண்டு..

வழக்கமாக ஆறு மணிக்கு எழுந்திருக்கும் அஞ்சு இன்று அரை மணிநேரம் முன்னதாகவே படுக்கையில் இருந்து எழுந்தாள்... 

பெட் ரூம் லைட் வெளிச்சத்திலேயே தனது போனைத் தேடி எடுத்தாள்.. 

தன் கணவன் கோபன் நம்பருக்கு அழைப்பு கொடுத்தாள்.

ஹலோ.. எங்க இருக்கீங்க..?

மறுமுனையில் கோபனின் உற்சாகம் கலந்த குரல்.. "..மேட்டுப்பாளையம் தாண்டிட்டேன் டார்லிங்.. இன்னும் ஒரு மணிநேரத்தில் உன்கிட்ட இருப்பேன்.."

அஞ்சு பதற்றமானாள்...


ட்ரைவர் பாஸ்கரன் எதுவுமே உங்ககிட்ட சொல்லலையா..? 

கோயம்பத்தூர்லயே ரெண்டு மணி நேரம் ஸ்பென்ட் பண்ணிட்டு ஒரு ஒன்பது ஒன்பதரை மணிக்கு கூட்டிட்டு வர சொன்னேனே.."

சொல்லாம இருப்பாரா.. 

ஏதோ அனிமல்ஸ் நடமாட்டம் இருப்பதா சொன்னார்.. 

நான்தான் கேக்கல.. பயப்படாத.. எனக்கு ஒண்ணும் ஆவாது.. வந்துடுவேன்.."

சரி.. பாத்து கவனமா வாங்க.. 

டேக் கேர்..

செல்போனை அணைத்து விட்டு பக்கத்தில் பார்த்தால்.. 


கட்டிலில் மஹியை காணவில்லை... 

டைம் ஆறானாலும் எந்திரிக்க மாட்டானே..? 

இப்ப எழுப்பாமயே எந்திரிச்சு எங்க போனான்..? 

அஞ்சுவின் மனதில் குழப்பமும் பயமும் திகிலும் ஒன்றாய் கலந்து இருந்தது..

வாஷ் ரூம் சென்று பார்த்தாள்... 

பங்களா முழுவதும் நிசப்தம்.. 


ஒவ்வொரு லைட்டையும் ஆன் செய்து கொண்டே மஹியை தேடினாள்..  எங்கும் இல்லை.. 

மாடிப்படி ஏறி அறைக்குள் பார்த்தாள்... இல்லை.. பால்கனி கதவை திறந்து பால்கனியில் பார்த்தாள்.. அங்கும் இல்லை.. 

இப்போது அஞ்சுவிற்கு பயம் அதிகமானது.. 

பால்கனியின் விளிம்பிற்கு வந்து நேற்று காலை புலி அமர்ந்து இருந்த இடத்தை எதேச்சையாக நோக்கியவள் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டாள்.. 

அங்கே.. 


விடிந்தும் விடியாத அந்த அதிகாலைப் பொழுதில்...

நேற்று புலி இருந்த அதே இடத்தில்... 

அதே புலி அமர்ந்து அவளையே நோக்கியது.. 

அந்த புலியின் அருகே அமர்ந்து அதனைக் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தான் மஹி..

                           ---------

அதே 2020--ஆம் ஆண்டு.. 

அதே நாள்.. மாலை 7 மணி.. 

கோவையில் பெரிய வசதி படைத்தவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட அந்த பெரிய மருத்துவமனை..

அந்த மனநல மருத்துவர் முன்பாக அஞ்சுவும் அவள் கணவன் கோபனும் அமர்ந்து இருந்தனர்.. 

அஞ்சு டாக்டரிடம் நடந்ததை விளக்கினாள்.. 


"..அப்பறம் நான் உடனே பாரஸ்ட் ஆபீஸருக்கும் போலீசுக்கும் தகவல் கொடுத்தேன்.. 

அவர்கள் வேகமாக வந்து பாய்சன் இன்ஜெக்ஷன் பிஸ்டல் வெச்சு புலியை மயக்க வெச்சுட்டாங்க.. 

மஹி ஒண்ணுமே தெரியாதது மாதிரி வீட்டுக்குள்ளே வந்தான்..

எது கேட்டாலும் பேச மாட்டேன்கிறான்.. 

எதையோ வெறிச்சு வெறிச்சு பாக்கிறான்.. 

சாப்பாடு நல்லாவே சாப்பிடறான்.. 

ஆனாலும் அவனோட எதுவுமே நார்மலா இல்லை.. டாக்டர்.. 

என் மகனுக்கு என்ன ஆச்சு டாக்டர்..? 

ப்ளீஸ்.. எப்படியாவது அவனை எனக்கு பழைய மஹியா மாத்திக் குடுங்க டாக்டர்.."

அஞ்சு கண்ணீரோடு டாக்டரை கையெடுத்து கும்பிட்டாள்.. 


கணவர் கோபன் டாக்டரை நோக்கி.. 

"..ஆமா டாக்டர்.. வழக்கமா நான் வந்தா என் கூட சந்தோஷமா விளையாடுவான்.. 

இப்ப என்னை யார்னு கூட தெரியாதது மாதிரி பாக்கிறான்.. 

அவன் நடவடிக்கை திடீர்னு இப்படி மாற என்ன காரணம்ன்னு தெரியல டாக்டர்.."


டாக்டர் எழுந்தார்.. 

"..மஹிக்கு திடீர்னு இப்படி ஏன் ஆச்சுன்னு தெரியணும்னா அவன் ஆழ் மனசில் இருக்கிற எண்ணங்களை நாம் தெரிஞ்சு கொண்டா மட்டுமே முடியும்.. 

இப்ப அதைத்தான் நான் பண்ணப்போறேன்.. 

ஏற்கனவே அவனை அன்கான்ஷியஸ் ஸ்டேஜ்-க்கு கொண்டு போயாச்சு.. 

நீங்களும் என் கூட இருந்தா நல்லா இருக்கும்.. வாங்க.."

டாக்டர் முன்னால் நடந்தார்.. 

அவரைப் பின் தொடர்ந்து சென்றனர் அஞ்சுவும் கோபனும்.. 


இருவர் முகத்திலும் சோகம் கலந்த குழப்பங்கள்..

மஹியை பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட அந்த அறையில் கட்டிலில் மயக்க நிலையில் படுக்க வைத்து இருந்தார்கள்.. 

அவனை சுற்றிலும் சில வெளிநாட்டு உயர்ந்த வகை மருத்துவ உபகரணங்கள் மற்றும் இரண்டு கம்பியூட்டர்கள்...

மஹியை நெருங்கி அவனிடம் குனிந்த டாக்டர்..


"..தம்பி.." என்றார்..

எந்த அசைவோ முனகலோ மஹியிடம் இல்லை.. 

மீண்டும் தம்பி என்கிறார்.. 

எதுவும் இல்லை..

இந்த முறை கொஞ்சம் ஆழ்ந்த குரலில் வித்தியாசத்துடன்.. 

கொஞ்சம் கடினமாக அழைக்கிறார்..

தம்பி......


இப்போது மஹியிடம் இருந்து "..ஹ்ம்.." என்று ஒரு முனகல்.. 

அருகே நின்றிருந்த அஞ்சுவிற்கும் கோபனிற்கும் முகத்தில் கொஞ்சம் உற்சாகம் வந்தது..

அதே குரலில் டாக்டர் கேட்டார்.. 

"..உன் பேரென்ன..?.." 

மஹியிடம் இருந்து பதில் இல்லை.. 

கொஞ்சம் குரலை மாற்றி உச்சிக் குரலில் ஒரு மாதிரி மீண்டும் கேட்கிறார்..

உன் பேரென்ன..?


இரண்டு மூன்று வினாடிக்கு பிறகு மஹியிடம் இருந்து கம்பீரமான குரலில் பதில் வந்தது... 

"..ராமசாமிக் கவுண்டர்..".

                         *முற்றும்*

            எண்ணமும் எழுத்தும் ,

              தமிழ் உணர்வாளன்

0/Post a Comment/Comments